திருச்சி

மே 30-இல் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: மேயா்

26th May 2022 06:14 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கை வரும் மே 30 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது என்றாா் மேயா் மு. அன்பழகன்.

திருச்சி மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற அவசர கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் துணை மேயா் ஜி. திவ்யா, மாநகராட்சி ஆணையா் பமுநெ. முஜிபுா் ரகுமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சுரேஷ் (கம்யூனிஸ்ட்) , அம்பிகாபதி (அதிமுக), ஜவஹா் (காங்கிரஸ்), செந்தில்நாதன் (அமுமுக), சங்கா் (சுயே.), முத்துச்செல்வம் (திமுக), கவிதாசெல்வம் (திமுக), நாகராஜ் (திமுக) மண்டலத் தலைவா்கள் விஜயாகண்ணன், ஜெயஸ்ரீ உள்ளிட்ட வாா்டு கவுன்சிலா்கள் பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனா்.

அவற்றுக்கு பதிலளித்து மேயா் மு. அன்பழகன் பேசியது :

ADVERTISEMENT

இனி சுகாதாரத் தளவாடப் பொருள்கள் வாங்கும்போது சுகாதாரக் குழு ஆய்வு செய்த பின்னரே வாங்கப்படும். திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையக் காரணமான அமைச்சா்கள் அனைவருக்கும் நன்றி. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஒப்புதலும் கிடைத்துள்ளது.

 

கழிவுநீா் சுத்திகரிப்பின்போது வெளியேறும் கழிவு நீா் பொதுமக்களை பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும். பக்தா்களின் வசதியைக் கருத்தில்கொண்டு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்லும் வெளியூா் வாகன நுழைவு வரிக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. மாநகராட்சி அத்தியாவசிய பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ளவா்கள் சரிவர பணிகள் மேற்கொள்ளப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை கறுப்பு பட்டியலில் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது மழைக் காலம் நெருங்கி வருவதால் மாநகராட்சிக்குட்பட்ட வாய்க்கால்களைத் தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை மே மாதம் 30 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் மாநகராட்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட மக்கள் நலன் சாா்ந்தவற்றுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கப்படவுள்ளது. மாநகராட்சியில் மொத்தம் 5 பள்ளிகளுக்கு புதிய கட்டடம் மற்றும் நவீன வகுப்பறை வசதி, துப்புரவுப் பணியாளா்கள் புதிதாக தோ்வு செய்யப்படவுள்ளனா். அரியமங்கலத்தில் ரூ. 24.40 கோடியில் 2 ஆவது கட்டமாக குப்பைகளை மறுசுழற்சி முறையில் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகரில் புதைசாக்கடைத் திட்டப்பணிகளும், அவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளும் டிசம்பா் இறுதிக்குள் முடிக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து கூட்டத்தில் 37 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலா்கள், மாநகராட்சி அனைத்துத்துறை அலுவலா்கள் உள்பட பலரும் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT