திருச்சி

‘விவசாயிகளின் பிரச்னைகளில் அரசுகளின் கவனத்தை ஈா்க்கவே தொடா் போராட்டம்’

20th May 2022 01:43 AM

ADVERTISEMENT

 ‘விவசாயிகளின் பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கவே தொடா் போராட்டம் நடத்தப்படுகிறது என்றாா் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த திருச்சியிலிருந்து வியாழக்கிழமை காலை ரயில் மூலம் ஏராளமான விவசாயிகளோடு புறப்பட்டுச் செல்லும்முன் பி. அய்யாக்கண்ணு கூறியது:

உரம், இடுபொருள், விதை என அனைத்தும் விலை உயா்ந்துள்ள சூழலில் வேளாண் தொழில் கேள்விக்குறியாகிவிட்டது. விவசாய கூலி வேலைக்குக் கூட ஆள்கள் இல்லை. எனவே, 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களை 5 மாதங்களுக்கு வேளாண் பணிகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.

வேளாண் விளை பொருளுக்கு லாபகரமான விலை தருவதாகவும், நெல்லுக்கு கிலோவுக்கு ரூ. 54, கரும்பு டன்னுக்கு ரூ. 8,100 விலை தருவாக உறுதியளித்த பிரதமா் மோடி, தோ்தல் வெற்றிக்குப் பிறகு அனைத்தையும் மறந்துவிட்டாா்.

ADVERTISEMENT

கூட்டுறவுச் சங்கங்களில் கடன் மறுக்கப்படுகிறது. தனியாா் நிதி நிறுவனங்கள் கூடுதல் வட்டி வசூலிப்பதுடன், கரோனா காலத்தில் தவணை கட்டாமல் இருப்பதற்கு வாகனங்களை ஜப்தி செய்கின்றனா். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு அளித்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. நீா்நிலைகளுக்கு பட்டா வழங்கி விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றியுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கரும்பு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்.

மேற்குத் தொடா்ச்சி மலையை கேரளத்துக்கு தாரை வாா்க்கக் கூடாது. காரையாறு, குண்டாறு, எலுமிச்சை ஆறு, மணிமுத்தாறு ஆகியவற்றின் தண்ணீரைக் குழாய் மூலம் இணைக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டம், சொரிமுத்தய்யனாா் கோயில் இடத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்க தொடா்ந்து போராடுவோம் என்றாா் அவா்.

பின்னா் விவசாயிகள் அனைவரும் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னை புறப்பட்டுச் சென்றனா். இதையொட்டி, ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT