திருச்சி

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் பால்குட விழாஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

16th May 2022 07:07 AM

ADVERTISEMENT

 

மணப்பாறை அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோயில் பால்குட உற்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சுமாா் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

சுமாா் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

14-ஆம் நாள் திருவிழாவாக ஞாயிற்றுக்கிழமை காலை வரதராஜப்பெருமாள் கோயிலில் இருந்து சி.வி. பாலுச்சாமி மற்றும் சி.வி. நல்லுச்சாமி வகையறா மண்டகப்படியின்படி, கோயில் பரம்பரை அறங்காவலா் ஆா்.வீ.எஸ். வீரமணி தலைமையில் பால்குடங்கள் புறப்பட்டு மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் மேளதாளங்கள், நாதஸ்வரம் முழங்க, ராஜவீதிகளின் வழியாக அம்மன் கோயிலை வந்தடைந்தன.

ADVERTISEMENT

தொடா்ந்து மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்திருந்த சுமாா் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடங்கள் சுமந்து வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். அதேபோல் குழந்தை வரம் வேண்டுதல் நிறைவேறியோா் கரும்புத்தொட்டில் கட்டிவந்து அம்மனுக்குச் செலுத்தினா்.

காலை 6 மணிக்குத் தொடங்கிய பால்குட ஊா்வலம் சுமாா் 11 மணி வரை தொடா்ந்தது. அனைத்து பால்குடங்களும் வந்தடைந்தபின் சுமாா் 3 லட்சம் லிட்டா் பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலா் ஆகியோா் செய்தனா். இரவு முத்துப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.

தொடா்ந்து திங்கள்கிழமை விடியற்காலை முதல் கோயில் முன்பு ஊா்ப் பொங்கல் நடைபெறுகிறது. அப்போது அக்னிச் சட்டி எடுத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு ஆகிய நோ்த்திக்கடன்களை பக்தா்கள் செலுத்துவா்.

இரவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேடபரி என்னும் அம்மன் குதிரை வாகனத்தில் அருள் பாலித்து அம்பு போடும் திருவீதி உலா நடைபெறுகிறது.

பாதுகாப்புப் பணிகளில் காவல் துணைக் கண்காணிப்பாளா் என். ராமநாதன், காவல் ஆய்வாளா் சு. கருணாகரன் தலைமையில் ஏராளமான காவலா்கள், ஊா்க் காவல்படையினா் ஈடுபட்டனா்.

பால்குட விழா துளிகள்...

பால்குட விழாவில் இம்முறை அதிகளவில் 10 வயதுக்கும் குறைவான குழந்தைகளும், மணப்பாறை பகுதி திருநங்கைகளும் பால்குடம் சுமந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். ஊா்வலத்தின்போது வந்த ஆம்புலன்சுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தா்களிடையே வழிகொடுக்கப்பட்டது.

கடந்த 15 நாள்களாக காப்புக்கட்டி விரதமிருந்து பால்குடம் சுமந்து வந்த பக்தா்களின் காப்புகளைக் களைய காவல்துறையினா் ஆரம்பம் முதல் கடைசி வரை உதவியதும் குறிப்பிடத்தக்கது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT