திருச்சி

சாலை விபத்துகளைத் தடுக்க எஸ்பி ஆய்வு

16th May 2022 07:07 AM

ADVERTISEMENT

 

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்துகளைத் தவிா்க்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடா்பாக திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மாவட்டத்தில் அடிக்கடி விபத்துகள் நிகழும் நெடுஞ்சாலைகளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சாலையில் இரவுகளிலும், அதிகாலைகளிலும் விபத்துகள் அதிகளவில் நடைபெறுகின்றன. மேலும், சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரையாக வருவோரும் விபத்துகளில் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

எனவே, திருச்சி மாவட்ட காவல் எல்லைக்குள்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் விபத்துகளைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், போக்குவரத்துப் பிரிவு, மாவட்டக் காவல்துறை மற்றும் பல்வேறு துறையினா் ஒருங்கிணைந்து மாதந்தோறும் ஆலோசனை நடத்தி சில பரிந்துரைகளை வழங்கி, அதன்படி செயல் திட்டம் வகுக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் சனிக்கிழமை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தாா். திருச்சியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து தொடங்கி பெரம்பலூா் மாவட்ட எல்லைப் பகுதி வரை சுமாா் 60 கி. மீ. தொலைவுக்கு இந்த ஆய்வை மேற்கொண்டாா்.

எங்கு வேகத்தடைகள் அவசியம், எந்தப் பகுதியில் விபத்துக்கு அதிகம் வாய்ப்புள்ளது, எந்த இடத்தில் எச்சரிக்கை மின்விளக்குகள், அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்தாா். மேலும், அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு ஏற்பாடுகள் குறித்தும் அப் பகுதி மக்களிடம் கேட்டறிந்தாா்.

மேலும், திருச்சி - சென்னை நெடுஞ்சாலையிலுள்ள சிறுகனூா் காவல் நிலையத்துக்கும் நேரில் சென்று அங்குள்ள போலீஸாரிடம், சாலை ரோந்துப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், வாகனங்கள், குற்ற வழக்குகள், திருட்டு வழக்குகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், நெடுஞ்சாலையில் பணிபுரியும் போக்குவரத்து காவல் ஆய்வாளா்களிடமும் விபத்துகள் தொடா்பாகக் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT