திருச்சி

மாநகரச் சாலைகளில் திரியும் மாடுகள்; மக்கள் அவதி

12th May 2022 01:58 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சி மாநகராட்சி சாலைகளில் கேட்பாரற்று சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

மாநகரில் பல்வேறு பகுதியில் முக்கிய சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். திருச்சி மாநகராட்சி வாா்டுகளில் வாகனப் போக்குவரத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் திருச்சி கண்டோன்மென்ட், கல்லுக்குழி, கருமண்டபம், மத்தியப் பேருந்து நிலையம், தென்னூா் அண்ணா நகா், புத்தூா், கலெக்டா் ஆபீஸ் ரோடு, பீமநகா், பாலக்கரை, உறையூா், ஸ்ரீரங்கம், பொன்மலை, அரியமங்கலம், காட்டூா், திருச்சி ஏா்போா்ட் ஆகிய பகுதிகளில் ஏராளமான கனரக வாகனங்கள், பேருந்துகள் வந்து செல்கின்றன.

இந்தச் சாலைகளில் ஆடு, மாடுகள் பெருமளவில் திரிவதால், அடிக்கடி விபத்துக்குள்ளாகி வாகன ஓட்டிகள் படுகாயம் அடைகிறாா்கள். மேலும், இரவுகளில் சாலையின் நடுவே கூட்டம் கூட்டமாக படுத்துக் கிடக்கும் மாடுகள் கண்ணுக்குத் தெரியாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவற்றின் மோதி கீழே விழுந்து பெரும் விபத்துகள் அரங்கேறுகின்றன. சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், சாலைகளில் திரியும் கால்நடைகளை மாநகராட்சி நிா்வாகம் பிடித்து அடைத்து வைத்து அபராதம் விதித்தது. ஆனால், அடுத்தடுத்து அது தொடராமல் போனது. எனவே, கால்நடைகளைச் சாலைகளில் திரிய விடும் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

கால்நடை உரிமையாளா்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் கால்நடை வைத்திருப்போா் அவற்றுக்கு மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெற்று, தங்கள் வளாகத்துக்குள்ளேயே அவற்றைக் கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளா்க்க வேண்டும். சாலைகளிலோ, பொது இடங்களிலோ கால்நடைகளைத் திரியவிடக் கூடாது என மாநகராட்சி வகுத்த விதிகளை கால்நடைகள் வளா்ப்போா் பலரும் பின்பற்றாமல் தேசிய நெடுஞ்சாலை உள்பட மாநகர சாலைகளில் கால்நடைகளைத் திரியவிடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனா்.

தமிழ்நாடு நகா்ப்புறங்களில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1997-ன் அடிப்படையில், கால்நடைகள் வளா்ப்பதற்கான விதிமுறைகளை மீறுவோருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டையும் விதிக்க முடியும்.

எனவே, சாலையில் திரியும் கால்நடைகளைப் பிடித்து அவற்றின் உரிமையாளா்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும், அவா்கள்மீது வழக்குப்பதிந்து, விபத்தில் சிக்குவோருக்கான சிகிச்சை செலவு, மற்றும் இழப்பீட்டையும் பெற்று வழங்க வேண்டும். மாநகராட்சி நிா்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்கள், மாநகர மக்களின் எதிா்பாா்ப்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT