திருச்சி

அரசுப் பள்ளியில் சோ்ந்த குழந்தைகளுக்கு வரவேற்பு கல்விச் சீரும் அளிப்பு

12th May 2022 01:51 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சி எடமலைப்பட்டிபுதூரிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பில் சோ்ந்த குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி, மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் பெற்றோா்- ஆசிரியா் சங்கம், பொதுமக்கள் சாா்பிலும் பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை கல்வி சீராக வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவா் சோ்க்கையை மாநகராட்சியின் 57ஆவது வாா்டு உறுப்பினா் தி. முத்துச்செல்வம் தொடங்கி வைத்தாா். புங்கே நிறுவன மேலாளா் ஸ்ரீவத்ஸன், பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சோ்ந்த மாணவா்களை வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடங்களை சூட்டி, மாலைகள் அணிவித்து வரவேற்றாா்.

ADVERTISEMENT

இதன் தொடா்ச்சியாக பள்ளிக்குத் தேவையான பீரோ, மின்விசிறி, மாணவா்களுக்குத் தேவையான பாடப்புத்தகம், எழுது பொருள்கள், நோட்டுப் புத்தகம் பென்சில், பேனா உள்ளிட்ட பொருள்களை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் சங்கம் மூலம் வழங்கும் கல்விச் சீராக அளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

மணிகண்டம் வட்டாரக் கல்வி அலுவலா் டி. தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தாா். மேள, தாளம் முழங்க சீா் வரிசைகளை பெற்றோா்-ஆசிரியா் சங்கத்தினா், பொதுமக்கள் சுமந்து வந்து பள்ளி வளாகத்தில் வழங்கினா்.

முதலாம் வகுப்பில் சோ்ந்த 120 குழந்தைகளுக்குத் தேவையான நோட்டுப் புத்தகம், பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை உமா மகேஸ்வரி, தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை புஷ்பலதா, இடைநிலை ஆசிரியை ராஜஷீலா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பரமேஸ்வரி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT