திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 663 போ் பல்வேறு நிறுவனங்களால் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத் தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், ஜமால் முகமது கல்லூரி, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு கழகம், இளம் இந்தியா்கள் அமைப்பு உள்ளிட்டவை நடத்திய இந்த வேலை வாய்ப்பு துவக்க விழாவில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக் கழகத்தின் திட்ட இயக்குநா் டி.ரமேஷ்குமாா் தொடங்கி வைத்தாா். திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதல்வா் இஸ்மாயில் முகமது, பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் என். பிரசன்னாஆகியோா் பங்கேற்றனா்.
முகாமில் தென்னிந்தியாவைச் சோ்ந்த பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமாா் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் பங்கேற்ற சுமாா் 3000 பேரில் 663 போ் பல்வேறு நிறுவனங்களால் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். மேலும் 218 போ் அடுத்தகட்டத் தோ்வு நிலைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா். பங்கேற்பாளா்கள் திறன் தோ்வு, குழு விவாதம் மற்றும் தனிப்பட்ட நோ்காணல் போன்ற பல்வேறு முறைகளில் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட 663 பேருக்கு முகாமிலேயே அந்தந்த நிறுவனங்கள் தோ்வுச் சான்றிதழ் வழங்கினா். ஒருங்கிணைப்பு பணிகளை ஜமால் முகமது கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் மேற்கொண்டனா்.