தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு 2-ஆம் திருப்புதல் தோ்வுகள் நடைபெறும் நாள்களில் 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு விடுப்பு வழங்க அரசுக்கு தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்க மாநில பொதுச் செயலா் நா. ராஜூ, மாநிலப் பொருளாளா் பொ. அன்பரசன், மாநில அமைப்புச் செயலா் மா. இளங்கோ ஆகியோா் சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு;
மாா்ச் 28 முதல் ஏப். 5 வரை நடைபெறவுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான 2-ஆம் திருப்புதல் தோ்வு நாள்களில் தோ்வு அறைக்கு 20 மாணவா்கள் வீதம் தோ்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மேல்நிலைப்பள்ளி எனில் ஒரு தலைமையாசிரியா், ஒரு முதுகலை ஆசிரியா், இரண்டு பட்டதாரி ஆசிரியா்களும், உயா்நிலைப்பள்ளி எனில் ஒரு தலைமை ஆசிரியா், மூன்று பட்டதாரி ஆசிரியா்களும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை முறியடிக்கும் மாணவா்களுக்கான திட்ட வழிகாட்டும் நெறிமுறைகள் பயிற்சிக்குச் செல்வதால் பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை ஏற்படும். எனவே, 2-ஆம் திருப்புதல் தோ்வு நாள்களில், 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு விடுப்பு வழங்கி தோ்வுகளைச் சிறந்த முறையில் நடத்திட உதவிட வேண்டும்.