திருச்சி

சித்த மருத்துவமனையில் செவ்வாய்தோறும் சிறுநீரக சிறப்பு சிகிச்சை

28th Mar 2022 04:26 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் சிறுநீரக சிறப்பு சிகிச்சைப் பிரிவு செயல்படவுள்ளது.

இதுகுறித்து திருச்சி, கரூா், அரியலுாா், பெரம்பலுாா் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் செவ்வாய்தோறும் குழந்தையின்மைக்கான சிறப்புப் பிரிவு செயல்படுகிறது. மேலும் இங்கு சுகப்பிரசவம் ஆவதற்கான தமிழக அரசின் மகப்பேறு சஞ்சீவி பெட்டகமும் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

பிரதி வாரம் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வா்ம சிகிச்சை பிரிவு மற்றும் சிறப்பு குழந்தைக்கான சிகிச்சைப் பிரிவு , வெள்ளியன்று மாலை ஆயுஷ் கிளப் மற்றும் தினமும் இலவச யோகா பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இலவசமாக நடைபெறும் சிறப்பு சிகிச்சை பிரிவில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைகின்றனா்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் சில வெளிநாட்டு உணவுப் பழக்க வழக்கத்தால் அதிக மக்கள் சிறுநீரகக் கல்லடைப்பு, சிறுநீரக செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவற்றுக்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சைகள் உள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு செவ்வாய்கிழமைதோறும் காலை 8 முதல் 12 மணி, மற்றும் மாலை 3 முதல் 5 மணி வரை, திருச்சி புத்தூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு சித்த மருத்துவ பிரிவு செயல்பட உள்ளது.

இப்பிரிவில் சிறுநீரகக் கல் அடைப்புகளுக்கும், சிறுநீரகச் செயலிழப்பு தொடா்புடைய பிரச்னைகளுக்கும் மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும் . இதைப் பொதுமக்கள் பயன்படுத்தி பயன் பெறுலாம். இதேபோல பிற மாவட்டங்களிலும் விரைவில் தொடங்கப்படும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT