திருச்சி

சமூக சீர்திருத்தத்தில் வழக்குரைஞர்களின் பங்கு அளப்பறியது

21st Mar 2022 12:46 PM

ADVERTISEMENT

துறையூர்: சமூகத்தில் அந்தந்த காலத்திற்கு ஏற்ற சீர்திருத்தம் செய்வதில் வழக்குரைஞர்கள் ஆற்றியுள்ள பணி அளப்பறியது என்றால் மிகையல்ல என சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரும், சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழக சீர்மிகு சட்டப் பள்ளியின் பகுதி நேர விரிவுரையாளருமான வி. உதயகுமார் கூறினார்.

திருச்சி சட்டக் கல்லூரியில் 2001 - 2004 ஆம் ஆண்டில் மூன்றாண்டு சட்டம் பயின்றவர்கள் ஒன்றும் கூடும் விழா அக்கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) நடைபெற்றது. அந்நிகழ்விற்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது.

ஒவ்வொரு சட்டக் கல்லூரியும் அது அமைந்துள்ள பகுதிக்கேற்ற சிறப்பு தன்மையுடைது. ஆனால் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி சட்டக் கல்லூரி மற்றக் கல்லூரிகளுக்கு உண்டான பண்புகளின் கலவையாகவும் அதே சமயத்தில் அமைதியான சூழலையும்  கொண்டது. 17ஆண்டுகளுக்கு முன்னர் பல பகுதிகளிலிருந்து இங்கு வந்து இக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்று விட்டு சென்ற தாங்கள் தற்போது அரசின் வருவாய், காவல், தொழிலாளர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளாகவும் பல்வேறு நீதிமன்றங்களில் அரசு, அரசு சாரா வழக்குரைஞராகவும் மக்களுக்கு சேவையாற்றுவதன் மூலம் இக்கல்லூரிக்கு பெருமை சேர்த்து வருகிறீர்கள்.

சமுதாய கட்டமைப்பில் நிதி, காவல், நீதி ஆகிய அரசு துறைகள் மிகவும் முக்கியமானது. இதில் நீதித்துறை செயல்பாடு சரியில்லையென்றால் சமூதாயம் சீர்கெட்டு விடும். அத்தகைய நீதிமன்ற செயல்பாடுகளில் வழக்குரைஞர்கள் பணி மிக முக்கியானது. வழக்குரைஞர் தவறு செய்தால் உடனடியாக சமுதாயத்திற்கு தெரிந்து விடுகிறது. கடும் விவாதப் பொருளாகி மக்களால் விமர்சிக்கப்படுகிறது. ஆகையால் சட்டம் பயின்றவர்கள் ஒரு போதும் சட்டத்தை மீறக்கூடாது. வழக்குரைஞர் பணியில் தான் இளம்(ஜூனியர்), மூத்த (சீனியர்) மற்றும் முது நிலை வழக்குரைஞர் எனவும் அதையும் கடந்து சட்ட மேதை (ஜீனியஸ் இன் லா) என்ற படிநிலைகள் சட்டம்பயின்றவரின் தகுதிக்கேற்ப அவரை வந்தடைகிறது என்றும், சட்டம் பயின்ற அனைவரும் தங்கள் வாழ்வில் வியத்தகு சாதனைகள் புரியவேண்டும் என்று வாழ்த்துவதாகவும் கூறினார்.
 
நிகழ்வில் இக்கல்லூரியில் பயின்று இங்கேயே உதவி பேராசிரியராக உள்ள கார்த்திக், திருவிடைமருதூர் வட்டாட்சியர் சந்தனவேல், சமயபுரம் காவல் ஆய்வாளர் கிங் ஆப் தாமஸ்ராஜன், திருச்சி தொழிலாளர் துறை உதவி ஆணையர் மூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், நெடுஞ்சாலை துறை அலுவலர் ராஜா உள்ளிட்ட அரசு பணியாளர்களும், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குரைஞர்களாகவும் உள்ள பலர் பங்கேற்று சட்டக் கல்லூரிக்கு பின்னர் தங்கள் வாழ்வி்ல் அடைந்த முன்னேற்றம் குறித்தும், சட்டம் படித்த காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளையும் செய்த குறும்புகளையும் சொல்லி மகிழ்ந்தனர்.

ADVERTISEMENT

இந்நிகழ்வின் போது கல்லூரி நூலக பயன்பாட்டிற்காக பிளாஸ்டிக் இருக்கைகள் நன்கொடையாக வழங்கினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆண்டிமடம் பாலமுருகன், அரியலூர் கொளஞ்சி, திருச்சி வழக்குரைஞர்கள் குமார், கிருஷ்ணகுமார், பிரபாகரன் உள்ளிட்டோர் செய்தனர். முன்னதாக உதவி பேராசிரியர் கார்த்திக் வரவேற்றார். நிறைவில் திருச்சி வழக்குரைஞர் காமராஜ் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT