திருச்சி

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சி மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

21st Mar 2022 03:09 PM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் கடந்த, சுமார் ஆண்டுக்கு பிறகு மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு திருச்சி மேயராக திமுகவை சேர்ந்த மு. அன்பழகன் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்று மேயர் அறிவித்தார். அதன்படி, திங்கள்கிழமை காலை, மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக வழங்கினர்.

மேயர் மு. அன்பழகன், துணை மேயர் திவ்யா, ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் மேயர் அன்பழகன் கூறுகையில்,

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சியை சென்னைக்கு அடுத்தபடியாக தரம் உயர்த்துவதே எங்களின் கனவு என அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டுள்ளார். அதற்கேற்ற வகையில் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் ஏற்கனவே திருச்சி மாநகராட்சியில் செயல்பட்டு வரும் திட்டப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 

குறிப்பாக புதை வடிகால் திட்டம், சாலை மற்றும் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும். திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் பறக்கும் மேம்பாலம் அமைய உள்ளது. கிடப்பில் உள்ள அரிஸ்டோ மேம்பால பணிகளும் துரித படுத்தப்பட்டுள்ளன. 

தென்னூர் மற்றும் பீமநகர் உள்ளிட்ட மேம்பாலங்களின் அடியில் காலி இடங்களில், ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில், பூங்காக்கள் அமைக்கவும் அல்லது சிறு கடைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

மாநகராட்சியில் குப்பைகளை கொட்டுவதற்கு ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் தற்காலிகமாக அமைக்கப்படும். பின்னர் அவை படிப்படியாக அகற்றி, குப்பைகள் அற்ற மாநகராட்சி என்ற அளவில் திருச்சி மாநகராட்சி மேம்படுத்தப்படும். பொதுமக்களின் குறைகள் அந்தந்த வார்டு உறுப்பினர்கள் மற்றும் கோட்டத் தலைவர்களின் வாயிலாக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT