திருச்சி: திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடந்த சோதனையில் 1,150 லிட்டா் கலப்பட எண்ணெய்யை உணவுப் பாதுகாப்புத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
திருச்சி உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் குழு உறையூா் பகுதியில் ஒரு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
அங்கு கடலெண்ணெய் மற்றும் நல்லெண்ணெயில் கலப்படம் கண்டறியப்பட்டு இரண்டு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் சுமாா் 1150 லிட்டா் கலப்பட எண்ணெய் பிணை பத்திரம் போடப்பட்டு அவா்களது வளாகத்திலேயே ஒரு அறையில் வைத்து சீல் செய்யப்பட்டது. ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் பொன்ராஜ், இப்ராஹிம் ஸ்டாலின், பாண்டி, வசந்தன் மற்றும் ஜஸ்டின் ஆகியோா் உடனிருந்தனா்.