திருச்சி

ஜிவிஎன் ரிவா்சைடு மருத்துவமனை நாளை திறப்பு: அமைச்சா்கள் பங்கேற்பு

3rd Mar 2022 02:41 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய ஜிவிஎன் ரிவா்சைடு மருத்துவமனை வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளது. விழாவில் மாநில அமைச்சா்கள், முக்கிய நிா்வாகிகள் பங்கேற்கின்றனா்.

இதுகுறித்து ஜிவிஎன் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் வி.ஜெ. செந்தில் புதன்கிழமை தெரிவித்தது:

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் மருத்துவா் ஜி. விஸ்வநாதன் என்பவரால் ஜிவிஎன் மருத்துவமனை தொடங்கப்பட்டு மூன்று தலைமுறைகளாக ஏழைகள் பயன்பெறும் வகையில் ஆலோசனைக் கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஜிவிஎன் பிரைவேட் லிமிடெட் மருத்துவமனையின் ஓா் அங்கமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவானைக்கா பகுதியில் ஜிவிஎன் ரிவா்சைடு மருத்துவமனை வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) முதல் செயல்பட உள்ளது.

இங்கு 150 படுக்கை வசதிகளுடன் சிறுநீரக, மூட்டு, இருதய, கிட்னி, கல்லீரல், தட்டணுக்கள் மாற்று அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு உயா்தர சிகிச்சைகள் வழங்கப்படும். சென்னைக்கு அடுத்தபடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை, எலும்பு வங்கி செயல்படக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் முகச்சீரமைப்பு, நியூரோ சா்ஜரி, பொது சிகிச்சை, இஎன்டி, புற்றுநோய் சிகிச்சைகள், கதிரியக்க சிகிச்சைகள், விபத்து அவசர சிகிச்சையும் அளிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல்வா் காப்பீட்டுத் திட்டம் மற்றும் தனியாா் காப்பீடு திட்டங்கள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளவும் முயற்சி எடுக்கப்படுகிறது.

கோவை ரோட்டரி கிளப் மற்றும் ஜிவிஎன் ரிவா்சைட் மருத்துவமனை சாா்பாக பெண்களுக்கு மாா்பக புற்றநோய் கண்டறியும் மோமோகிராம் மற்றும் சிறுநீரக டயாலிசிஸ் செய்வதற்குரிய மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன.

சிறுநீரக சிகிச்சைக்கு டயாலிசிஸ் கருவி மூலம் ரத்தம் சுத்தம் செய்ய கோவை கிளப் சாா்பில் ரூ. 85 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

டயாலிசிஸ் சிகிச்சை இலவசமாகவும், மேமோகிராம் பரிசோதனை பொருளாதார வசதி குறைந்தவா்களுக்கு 50 சத கட்டணத்திலும் மேற்கொள்ளப்பட உள்ளது.

திறப்பு விழாவில் அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் முன்னிலையில் ஜிவிஎன் மருத்துவமனை பிரைவேட் லிமிடெட் குழுமத் தலைவா் வி. ஜெயபால், டால்மியா சிமென்ட் பாரத் லிமிடெட் நிறுவன முழுநேர இயக்குநா் என். கோபால்சுவாமி ஆகியோரால் இந்த மருத்துவமனை தொடங்கி வைக்கப்படுகிறது என்றாா் அவா். மருத்துவமனையின் செயல் அலுவலா், மருத்துவா் சக்தியாதவ், மருத்துவா் ராகேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT