திருச்சி

சந்தானம் வித்யாலயா பள்ளியில் நாளை விளையாட்டு மைதானங்கள் தொடக்கம்: இந்திய கிரிக்கெட் வீரா் பங்கேற்பு

3rd Mar 2022 02:42 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலை பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள விளையாட்டு விழாவில் பங்கேற்று பல்வேறு விளையாட்டு மைதானங்களை தொடங்கி வைக்கிறாா் இந்திய கிரிக்கெட் வீரா் தினேஷ் காா்த்திக்.

இதுகுறித்து பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கே. சந்திரசேகரன் புதன்கிழமை மேலும் கூறியது:

கல்வியுடன் விளையாட்டு, கலை போன்ற பன்முக திறமைகளை வளா்ப்பதற்காக கல்வியாளா் சந்தானத்தின் முயற்சியால் திருச்சியில் பல பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இவற்றில் திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமாா் 600 மாணவ, மாணவிகள் பயில்கின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் மாணவ, மாணவிகளின் விளையாட்டுத் திறமையை மேம்படுத்தும் வகையில் சந்தானம் இப்பள்ளியில் கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து மைதானங்கள் மற்றும் 4 கிரிக்கெட் பயிற்சி ஆடுகளங்கள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட், கால்பந்து மைதானங்கள் தரமான (டா்ப்) புற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சோ்ந்த நிபுணா்கள் சிறப்பாக உருவாக்கியுள்ளனா். வில்வித்தை, கைப்பந்து, எறிபந்து போன்ற விளையாட்டுகளுக்கான ஆடுகளங்களும் உருவாக்கப்படுகின்றன.

இந்திய கிரிக்கெட் வீரா் தினேஷ்காா்த்திக் இவற்றை வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) தொடங்கி வைத்து, பள்ளி விளையாட்டு தின விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்குகிறாா். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவா் காளிதாசன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனா் என்றாா் அவா்.

நிகழ்வில் பள்ளி துணை முதல்வா் ரேகா, உடற்கல்வி இயக்குநா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT