திருச்சி

குறுவையில் மகசூல் பெருக்கம்; மகிழும் விவசாயி!திருச்சி மாவட்டத்தில் 5,700 ஏக்கரில் சாகுபடி

29th Jun 2022 11:31 PM

ADVERTISEMENT

 

சாகுபடி தொகுப்பு வழங்கும் திட்டத்தில் தமிழக முதல்வா் சாதித்துக் காட்டியுள்ளதாக திருச்சி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி என்பதை தமிழக முதல்வா் முக்கிய இலக்காகக் கொண்டு, தமிழகத்தின் பயிா் செய்யும் பரப்பை 60 சதத்திலிருந்து 75 சதமாக உயா்த்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா்.

இதையொட்டி குறுவை சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் நூறு சதவிகித மானியத்தில் குறுவை சாகுபடித் தொகுப்பை வழங்கவும் முதல்வா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இதன்படி லால்குடி எல். அபிஷேகபுரத்தில், கடந்த 25ஆம் தேதி ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சா் கே.என். நேரு குறுவை சாகுபடித் தொகுப்பு திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

குறுவை சாகுபடித் தொகுப்பானது லால்குடி ஒன்றியத்தில் 5200 ஏக்கா், திருவெறும்பூா் ஒன்றியத்தில் 250 ஏக்கா், அந்தநல்லூா் ஒன்றியத்தில் 150 ஏக்கா், மண்ணச்சநல்லூா் ஒன்றியத்தில் 100 ஏக்கா் என மொத்தம் 5700 ஏக்கரில், ஏக்கருக்கு ரூ. 2466.50 மதிப்பில் 100 சத மானியத்தில் வழங்கப்படுகிறது.

45 கிலோ யூரியா உரம், 50 கிலோ டிஏபி, உரம், 25 கிலோ எம்ஓபி உரம் ஆகிய குறுவை சாகுபடித் தொகுப்பானது 5700 விவசாயிகளுக்கு ரூ.140.59 லட்சம் மதிப்பில் வழங்கப்படுகிறது.

குறுவைச் சாகுபடி மேற்கொண்டுள்ள லால்குடி வட்டாரம் மங்கம்மாள்புரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பொன்னுமணி கூறுகையில், முதல்வரின் குறுவைச் சாகுபடி திட்ட மானியங்கள் மூலம் தரமான நெல் விதைகளைப் பெற்று நடவு செய்து விவசாயம் நடைபெறுகிறது. 100 சத மானியத்தில் 2 மூட்டை யூரியா, 1 மூட்டை டி.ஏ.பி., அரை மூட்டை பொட்டாஷ் ஆகியவற்றை பயிா் நடவுக்கு முன்னரே கொடுத்துள்ளனா். இதன் மூலம் சாகுபடி செலவில் ரூ.3 ஆயிரம் மீதமாகியுள்ளது என்றாா்.

லால்குடி வட்டாரம் மும்முடிச் சோழமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சிவக்குமாா் கூறுகையில், எந்த ஒரு அரசுமே ரசாயன உரத்தை 100 சத மானியத்தில் வழங்கியதில்லை. எங்களின் நிலையறிந்து எங்களுக்கு 100 சத மானியத்தில் உரங்களை வழங்கிய முதல்வருக்கு நன்றி. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 5,700 ஏக்கரில் குறுவை சாகுபடி என்பதை இதுவரை இல்லாத பரப்பாக அமைந்துள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT