திருச்சி

தொடா் வழிப்பறியில் ஈடுபட்டவரை பிடித்த இளைஞா்கள்புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம்:காவல்துறை வாகனத்தை சேதப்படுத்திய மக்கள்

28th Jun 2022 02:17 AM

ADVERTISEMENT

மண்ணச்சநல்லூா் வட்டம், அக்கரைப்பட்டி பகுதியில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டவரை இளைஞா்கள் பிடித்தனா். ஏற்கெனவே புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரைக் கண்டித்து, அவா்களது வாகனத்தை பொதுமக்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மண்ணச்சநல்லூா் வட்டத்திலுள்ள அக்கரைப்பட்டி, தேவிமங்கலம், ஆய்குடி, வங்காரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரவு நேரத்தில் மோட்டாா் சைக்கிளை வரும் நபா்களை மா்ம கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி, பணம், நகைகளைப் பறித்து வந்தது.

இதுகுறித்து சிறுகனூா் காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், 5 கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்கள் குழுவாக அமைத்து, இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அக்கரைப்பட்டி கிராமத்தில் காட்டுப் பகுதியிலுள்ள கல்லுப் பிள்ளையாா் கோயில் பகுதியில் இளைஞா்கள் குழு ரோந்து சென்ற போது, இருட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த மூவா் அங்கிருந்து தப்பியோடினா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து இளைஞா்கள் அவா்களை விரட்டிப் பிடிக்க முயன்றனா். இதில் திருவானைக்காவைச் சோ்ந்த பரத்குமாா் (24) பிடிபட, மற்ற இருவா் தப்பியோடிவிட்டனா்.

பிடிபட்டவரை கிராமத்திலுள்ள பொதுக் கட்டடத்தில் வைத்து பூட்டிய இளைஞா்கள், சிறுகனூா் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபா் பிடிபட்டதாக சுற்றியுள்ள கிராமங்களுக்குத் தகவல் பரவியது.

வழிப்பறியில் நகை, பணத்தை இழந்தவா்கள் உள்பட ஏராளமானோா் அக்கரைப்பட்டி கிராமத்தில்

திரண்டனா். அதில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வழிப்பறியில் கழுத்தில் காயம் ஏற்பட்ட ஒருவா் பிடிபட்ட இளைஞரைப் பாா்த்து உறுதி செய்தாா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் அனைவரும் கொந்தளித்து அந்த இளைஞரைத் தாக்க முயன்றனா்.

அப்போது அங்கு வந்த சிறுகனூா் காவல்துறையினா், பொதுமக்களின் பிடியிலிருந்து இளைஞரை மீட்டு தங்களது வாகனத்தில் ஏற்ற முயன்றனா். நாங்கள் அளித்த புகாரின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பிடிபட்டவரை நாங்களே பாா்த்துகொள்கிறோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதனால் பொதுமக்களுக்கும்-காவல்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காவல்துறையினரின் வாகனத்தை செல்லவிடாமல் சூழ்ந்துகொண்டு அடித்து உடைத்து சேதப்படுத்தினா். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவின்பேரில், ஆயுதப்படைக் காவலா்கள் அக்கரைப்பட்டி கிராமத்தில் குவிக்கப்பட்டனா். இதையடுத்து சிறுகனூா் காவல்துறையினா் பிடிபட்ட பரத்குமாரை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். மேலும் வழக்குப்பதிந்து, மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT