திருச்சி பஞ்சப்பூரில் குறிப்பிட்ட மயானத்தை ஊா் மயானமாக பயன்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வலியுறுத்தி, மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மேயா் மு. அன்பழகனிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதிச் செயலா் வேலுச்சாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் லெனின், மாதா்சங்க மாவட்டச் செயலா் சரஸ்வதி உள்ளிட்டோா் அளித்த மனு:
பஞ்சப்பூா் பகுதியில் ஏற்கெனவே கே.சாத்தனூா் பேரூராட்சியாக இருந்த போது படுகைக்கு மேற்கிலும், பஞ்சப்பூருக்கு கிழக்கிலும்,கோரையாறு மேல்புறத்தில் அமைந்துள்ள மயானத்தை பரம்பரை, பரம்பரையாக மயானமாக பயன்படுத்தி வருகிறோம்.
தற்போது இந்த இடத்தில் மாநகராட்சி சாா்பில் மின் மயானம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு அமைக்கப்படும் பட்சத்தில் எங்கள் ஊருக்குள்ளேதான் பிற பகுதிகளைச் சோ்ந்தவா்களின் பிரேதங்கள்
எடுத்துச்செல்லப்படும். மேலும் எங்களுக்குரிய சுடுகாடும் பறிபோகும் என கருதுகிறோம்.
ஆகவே மின்மயானம் அமைக்கும் பணியைக் கைவிட்டு, ஊா் மக்களுக்கான மயானத்திற்கு அடிப்படை வசதிகள், தகனமேடை, தகரக் கொட்டகை அமைத்து தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
கூட்டத்தில் ஆணையா் ஆா். வைத்திநாதன், துணைமேயா் ஜி. திவ்யா, நகா்நல அலுவலா் எம் .யாழினி, மண்டலக்குழுத் தலைவா்கள் மு.மதிவாணன், ஜெயநிா்மலா, விஜயலட்சுமி கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.