திருச்சி

‘5,700 விவசாயிகளுக்கு குறுவைச் சாகுபடி தொகுப்பு’

26th Jun 2022 01:47 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டத்தில் 5,700 விவசாயிகள் குறுவை சாகுபடி தொகுப்பு பெற்று பயன்பெறுவதாக தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

கடந்த மே 30ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், கால்வாய்கள், பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை ஆய்வு செய்ய வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் ரூ.61 கோடியில் குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தாா்.

இதையடுத்து தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் முழுமையாகவும், கடலூா், திருச்சி மற்றும் அரியலூா் மாவட்டங்களில் டெல்டா வட்டாரங்களை உள்ளடக்கியும் குறுவைச் சாகுபடித் தொகுப்புத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் லால்குடி ஒன்றியம், எல். அபிஷேகபுரத்தில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையில் விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பை வழங்கி அமைச்சா் கே.என். நேரு பேசியது:

இத்திட்டமானது லால்குடி ஒன்றியத்தில் 5200 ஏக்கா், திருவெறும்பூா் ஒன்றியத்தில் 250 ஏக்கா், அந்தநல்லூா் ஒன்றியத்தில் 150 ஏக்கா், மண்ணச்சநல்லூா் ஒன்றியத்தில் 100 ஏக்கா் என மொத்தம் 5700 ஏக்கரில் செயல்படுத்தப்படுகிறது. ஏக்கருக்கு ரூ. 2466.50 மதிப்பில் 100 சத மானியத்தில் 45 கிலோ யூரியா உரம், 50 கிலோ டிஏபி, உரம் 25 கிலோ எம்ஓபி உரம் ஆகியவை அடங்கிய குறுவை சாகுபடித் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 5700 விவசாயிகள் ரூ.140.59 லட்சம் மதிப்பில் பயன் பெறுவா் என்றாா் அவா்.

தொடா்ந்து, அன்பில் கிராமத்தில் ரூ. 40 லட்சத்தில் கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா். மேலும், அன்பில் மங்கம்மாள்புரம் மற்றும் ஆங்கரை கோவிந்தராஜபுரம் ஆகிய இடங்களில் புதிய ரேஷன் கடைகளையும் திறந்து வைத்து பொருள்களை வழங்கினாா்.

நிகழ்வில் லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் முருகேசன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் தி. ஜெயராமன், லால்குடி சரகத் துணைப் பதிவாளா் ரா. திவ்யா, ஒன்றியக் குழுத்தலைவா் தி. ரவிச்சந்திரன் மற்றும் வேளாண்மை, கூட்டுறவுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT