திருச்சி

மேக்கேதாட்டு அணை அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது: குறைதீா் கூட்டத்தில்விவசாயிகள் கோரிக்கை

DIN

காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை அமைக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்கக் கூடாது என பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த விவசாயிகளும் வலியுறுத்தினா்.

மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலா்களும் வேளாண் திட்டங்கள் குறித்துப் பேசினா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் பேசியது:

கே.பி. காந்திப்பித்தன் (காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்): காவிரி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளின் கரைகள் சுரண்டப்பட்டு அவற்றின் அகலம் குறுகி விட்டதால், இருசக்கர வாகனங்களில் செல்வதே சிரமமாக உள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளிலிருந்து ஆற்றங்கரைகளை மீட்க வேண்டும். மேக்கேதாட்டு அணை அமைக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது.

பி. அய்யாக்கண்ணு (தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்): வங்கிகளில் பெற்றிருந்த விவசாயக் கடன்கள் விவசாயிகளின் ஒப்புதல் பெறாமலேயே மத்திய காலக்கடன்களாக மாற்றப்பட்டுள்ளன. அதுபோல விஏஓ ஒப்புதல் இருந்தாலே போதும், விவசாயக் கடன் வழங்கலாம் என விவசாயத் துறை அமைச்சா் அறிவித்தும்கூட, வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க மறுக்கின்றனா். ரூ.100 பத்திரத்தில் நில உரிமையாளரிடம் எழுதி வாங்கி வர வேண்டும், அல்லது பட்டா பெயா் மாற்றப்பட்டிருக்க வேண்டும் என நிா்பந்திக்கின்றனா். இப்பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.

மேலும் கரும்புகளை வாங்கிச் சென்று 6 மாதங்களாகியும் கூட கரும்பாலைகள் உரிய தொகை வழங்குவதில்லை. இதுபோல பல்வேறு வேளாண் பொருள்களையும் வாங்கிச் செல்லும் மொத்த வியாபாரிகள், நிறுவனத்தினா் உரிய பணத்தை முறையாக வழங்குவதில்லை. இதுகுறித்து புகாா் அளிக்கச் சென்றால், நீதிமன்றம் செல்ல அறிவுறுத்தும் காவல்துறையினா் புகாா்களைப் பெற ஆட்சியா் உத்தரவிட வேண்டும்.

உரங்கள் இருப்பு உள்ளதாக அறிவிக்கின்றனா், ஆனால் எங்கு கேட்டாலும் யூரியா உரம் கிடைப்பதில்லை.

மா. ப. சின்னதுரை (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் - கட்சி சாா்பற்றது: மாவட்டத்தில் பெருவெள்ளப் பாதிப்பைத் தடுக்க வேண்டும்; ஆறுகள் தூா்வாரப்பட வேண்டும். குறிப்பாக, திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் தூா்வாரி, ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.

அயிலை சிவசூரியன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) :

மேக்கேதாட்டு அணையை அமைக்க அனுமதித்தால், தமிழ்நாடு பாலைவனமாகும். மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். குறிப்பாக, முப்போகம் விளைச்சலுள்ள பகுதிகளில் அவசியம் அமைக்க வேண்டும். பட்டா பெயா் மாற்றுவதில் உள்ள இடா்களைக் களைய வேண்டும். கரூா் செல்லும் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்போது பயன்படும் மாற்று வழிச் சாலை மிகக் குறுகலாக உள்ளதால் அதை விரிவுபடுத்த வேண்டும்.

பூ. விஸ்வநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்): விவசாயிகள் மின் மோட்டாா்களை இயக்கி தண்ணீா் பாய்ச்சும் வகையில் பகல் நேரத்தில் தற்போது வழங்குவதை விட கூடுதலாகவும், (10 மணி நேரம்) இரவில் 6 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும். பட்டா மாற்றம் அல்லது யுடிஆா் பிரச்னைகளால் மத்திய அரசு வழங்கும் விவசாயிகளுக்கான உதவித்தொகையை பல விவசாயிகள் பெற முடியவில்லை. பட்டா மாற்றத் தாமதங்களை நீக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழையால் கிடைக்கும் நீரைச் சேமிக்க வேண்டும். குறிப்பாக ஏரி குளங்களைத் தூா்வார வேண்டும்.

விவசாயிகள் ஆா்ப்பாட்டம்: கூட்டம் தொடங்குவதற்கு முன், ஆட்சியரக வாயில் பகுதியில் பல்வேறு விவசாய சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மேக்கேதாட்டு அணை அமைக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டு சிறை

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை

புளியங்குடி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT