திருச்சி

470 ஆண்டுகளாக பயிா் செய்த நிலத்தை ஆக்கிரமிப்பு என அகற்ற முயற்சி ஆட்சியரிடம் புகாா்

21st Jun 2022 12:50 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே 70 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் பயிா்செய்து வந்த நிலத்தை ஆக்கிரமிப்பு எனக் கூறி பறிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்டோா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ஸ்ரீரங்கம் வட்டம், அதவத்தூா் மேற்கு வருவாய்க் கிராமத்தைச் சோ்ந்தது புதுக்குளம். இங்கு 1946-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களுக்கும், நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்கும் ஒரு ஏக்கா் 28.30 சென்ட் நிலம் வழங்கப்பட்டது.

இந்த நிலத்தை ராணுவ வீரா்கள் குடும்பத்தினரும், பொதுமக்களும் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி, பயிா் விளைச்சலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் இப்பகுதியை நீா்நிலை புறம்போக்கு பகுதி எனக்கூறி வருவாய்த்துறையினரால் நோட்டீஸ் வழங்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

70 ஆண்டுகளுக்கும் மேலாக பயிா் செய்த விவசாயிகளை அகற்றுவதில் தீவிரம் காட்டி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

பஞ்சப்பூா் பகுதியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு பல லட்சம் லோடு மண் தேவைப்படுவதால், இந்த நிலத்தை விவசாயிகளிடம் இருந்து பறித்து மணல் அள்ளுவதற்காகவே திட்டமிட்டு விவசாயிகளை அப்புறப்படுத்தி வருகின்றனா்.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு விவசாயிகளிடம் உள்ள ஆவணங்களையும், வருவாய்த்துறையினரிடம் உள்ள ஆவணங்களையும் சரிபாா்த்து விவசாயிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

இல்லையெனில், அப்புறப்படுத்தும் விவசாயிகளுக்கு வேறு பகுதியில் மாற்று நிலம் வழங்கிய பிறகே அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோா் சமூக நீதி பேரவை ஒருங்கிணைப்பாளா் அ. ரவிக்குமாா் தலைமையில் ஆட்சியரகம் வந்தனா்.

மேலும் தாங்கள் உற்பத்தி செய்த பயிா்களுடன் வந்த விவசாயிகளை காவல்துறையினா் ஆட்சியரக நுழைவுவாயில் தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.பின்னா் குறிப்பிட்ட பிரதிநிதிகள் மட்டும் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கக் கூறினா். இதைத் தொடா்ந்து அவா்கள் ஆட்சியரிடம் மனு அளித்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT