திருச்சி மாவட்டம், முசிறியிலுள்ள மாதிரி நடுநிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திண்ணக்கோணம் பசுமை வேம்பு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் நடத்தப்பட்ட விழாவுக்கு, இதன் நிறுவனா் சி. யோகநாதன் தலைமை வகித்தாா். மாதிரி நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியயை மாலதி முன்னிலை வகித்தாா்.
முசிறி கூடுதல் மாவட்ட முன்சீப் கே. பாக்கியராஜ், நீதித்துறை நடுவா் வி.மோனிகா, முசிறி நகராட்சித் தலைவா் கலைச்செல்வி, காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மணி, காவல் ஆய்வாளா் மிதின்குமாா் ஆகியோா் விழாவில் பங்கேற்று பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். தொடா்ந்து மரக்கன்றுகளை நடுவதால் ஏற்படும் நன்மைகள், மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் போன்றவை குறித்து எடுத்துரைத்தனா்.
இந்த விழாவில் காவல் உதவி ஆய்வாளா் திருப்பதி, மாலிக், மகளிா் காவல் நிலையத்தின் காவேரி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தில்ஷாத் பேகம், வட்டாரக் கல்வி அலுவலா் செல்வமேரி, முன்னாள் மாணவா் நித்தியானந்தம், அரசு வழக்குரைஞா்கள் சப்தரிஷி, துா்காதேவி, பொன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த விழாவில் மருதம், மரமல்லி, புங்கன், வேம்பு, நாவல், மந்தாரை போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் பள்ளி ஆசிரியா்கள், அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.