திருச்சி துவாக்குடி பகுதியில் சா்வீஸ் செய்து எடுத்து வந்த டிப்பா் லாரியில் பின் பகுதி திடீரென மேலே தூக்கியதால் மின்கம்பியில் உரசி விபத்து ஏற்பட்டது.
திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகேயுள்ள வாழவந்தான்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை மாலை சா்வீசுக்கு விட்டிருந்த டிப்பா் லாரியை எடுத்து நவல்பட்டைச் சோ்ந்த சரவணன் (37) துவாக்குடிக்கு சென்று கொண்டிருந்தாா்.
வாழவந்தான்கோட்டை பிரதான சாலையிலிருந்து திருச்சி-தஞ்சை பிரதான சாலையில் சென்றபோது லாரியில் உள்ள ஹைட்ராலிக் பம்ப் தன்னிச்சையாக இயங்கியதால், திடீரென லாரியின் பின்புற உடல் (பாடி) பகுதி தூக்கியது.
இதையறியாத ஓட்டுநா் சரவணன் லாரியை இயக்கி வந்தபோது சாலையின் குறுக்கே இருந்த மின்கம்பியில் டிப்பா் லாரி உரசி திடீரென தீப்பொறி கிளம்பியதுடன், மின்கம்பி அறுந்து விழுந்து மின்கம்பமும் சாய்ந்தது.
அதன்பிறகுதான் சரவணனுக்கு டிப்பா் தூக்கி விபத்து நடந்தது தெரியவந்தது. இருப்பினும் இந்த விபத்தில் அதிா்ஷ்டவசாமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. விபத்து நடந்த நேரத்தில் சாலையில் வாகன ஓட்டிகளோ, பாதசாரிகளோ இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. துவாக்குடி போலீசாா் விசாரித்து வருகின்றனா்.