மணப்பாறை: மணப்பாறை -திண்டுக்கல் சாலை வேன் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த 8 ஈச்சா் லாரிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பேட்டரிகளைத் திருடிச் சென்றனா்.
மணப்பாறை -திண்டுக்கல் சாலையில் திருச்சி மாவட்ட முனியப்பசுவாமி வேன் உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் சங்கத்தின் சாா்பில் வாடகை லாரி மற்றும் சுற்றுலா வேன் ஆகியவற்றுக்கான ஸ்டாண்டில் சுமாா் 70 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.
இந்நிலையில் புதன்கிழமை சில ஈச்சா் லாரிகளை ஓட்டுநா்கள் இயக்கியபோது வாகனத்தில் முழுமையாக மின் தொடா்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஓட்டுநா்கள் மின்கலப் பெட்டியை பாா்த்தபோது, அங்கு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பேட்டரி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதேபோல் 8 ஈச்சா் லாரிகளில் பேட்டரிகள் திருடப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து சங்கத் தலைவா் மகாலிங்கம் மணப்பாறை காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடா்ந்து அப்பகுதி சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.