தமிழ்நாடு மின்வாரிய அனைத்துத் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் தென்னூரிலுள்ள மின்வாரியத் தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை விளக்கி சங்க மாவட்டச் செயலா்கள் பொறியாளா் சங்க நிா்வாகி சம்பத், ஐக்கிய சங்க கண்ணன், பெடரேஷன் அமைப்பின் சிவ. செல்வம், சிஐடியு நிா்வாகி அகஸ்டின், மின்வாரிய தொழிற்சங்க சம்மேளன நிா்வாகி தங்கவேல், ஏஇஎஸ்யு சங்க நிா்வாகி பெரியசாமி, ஐஎன்டியுசி நிா்வாகி கருணாநிதி, ஓய்வு பெற்றோா் சங்க நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி, மின்துறை பொறியாளா் அமைப்பு நிா்வாகி இருதயராஜ் ஆகியோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வை நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும். பஞ்சப்படி உள்ளிட்ட 23 சலுகைகளை பறிக்கும் மின் வாரிய ஆணையை ரத்து செய்ய வேண்டும். 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள சரண்டா் விடுப்பு மற்றும் 3 சத பஞ்சப் படியை உடனே வழங்க வேண்டும்.
மின்வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு வட்டச் செயலா் செல்வராஜ் நன்றி கூறினாா்.