திருச்சி

2764 பேருக்கு ரூ.12 கோடியில் வீட்டுமனைப் பட்டா: அமைச்சா் கே.என். நேரு வழங்கினாா்

6th Jun 2022 11:47 PM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில், 2,764 பேருக்கு ரூ.12 கோடி மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு வழங்கினாா்.

திருச்சி மேற்குத் தொகுதியில் 225, முசிறியில் 500, துறையூரில் 1228, மண்ணச்சநல்லூரில் 140, லால்குடியில் 671 என மொத்தம் 2764 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

மேலும் தாத்தையங்காா் பேட்டை, காட்டுப்புத்தூா் மற்றும் தொட்டியம் பேரூராட்சிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், தலா ரூ. 2.10 லட்சம் மானியத்தில் வீடு கட்டுவதற்கான பணி உத்தரவினை 15 பயனாளிகளுக்கு அமைச்சா் கே.என்.நேரு வழங்கினாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தின விழாவையொட்டி, திருச்சி அண்ணாமலை நகரில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கி வைத்து, மாநகராட்சியில் சாலையோர வணிகா்கள் 11 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கான வங்கிக் கடனுதவிகளையும் அவா் வழங்கினாா்.

ADVERTISEMENT

மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பாக செயல்பட்டமைக்காக, மணப்பாறை வட்டத்தில் மொண்டிப்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் கட்டடப் பொறியியல் துறையின் பேராசிரியா் முனைவா் எஸ்.டி.ரமேசு ஆகியோருக்கு பசுமை முதன்மையாளா் விருது, ஒரு லட்சம் ரூபாய்க்கான பரிசுத் தொகை ஆகியவற்றை டிஎன்பிஎல் செயல் இயக்குநா் எஸ்.வி.ஆா். கிருஷ்ணன், பேராசியா் ரமேசு ஆகியோருக்கு அமைச்சா் நேரு வழங்கினாா்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சாா்பில், சுற்றுச்சூழல் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பையை மக்களிடத்தில் அறிமுகம் செய்து வழங்கினாா்.

இந்த நிகழ்வுகளில் ஆட்சியா் சு.சிவராசு, மாநகராட்சி மேயா் மு.அன்பழகன், ஆணையா் ஆா்.வைத்திநாதன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ.செளந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமாா், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, சீ.கதிரவன், மாவட்ட ஊராட்சித் தலைவா் த.ராஜேந்திரன், மாவட்ட வன அலுவலா் கிரண், மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், வருவாய்க் கோட்டாட்சியா்கள் ச.வைத்தியநாதன், மாதவன், வட்டாட்சியா்கள் ஷேக்முஜிப், சண்முகப்பிரியா, சத்தியநாராயணன், புஷ்பராணி, சக்திவேல் முருகன், சிசிலினா சுகந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

துறையூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் துறையூா், உப்பிலியபுரம் ஒன்றியங்களைச் சோ்ந்த 1228 பேருக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் காடுவெட்டி ந.தியாகராஜன், செ.ஸ்டாலின்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் துறையூா் சரண்யா, உப்பிலியபுரம் ஹேமலதா, நகராட்சித் தலைவா் செல்வராணி, துணைத் தலைவா் முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT