திருச்சி

திருச்சி அருகே சோழா் கால நில அளவுகோல்கள், கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

6th Jun 2022 11:48 PM

ADVERTISEMENT

திருச்சி அருகே 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா்கால நில அளவுகோல்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுகளையும், அளவுகோல்களையும் நேரில் ஆய்வு செய்த மா. ராசமாணிக்கனாா் வரலாற்று ஆய்வு மைய இயக்குநா் மருத்துவா் இரா. கலைக்கோவன் கூறியது:

திருச்சி மாவட்டம், சமயபுரத்துக்கு அருகிலுள்ளது கண்ணனூா். இந்த ஊரானது 14-ஆம் நூற்றாண்டளவில் ஹொய்சள அரசா்களின் தலைநகரமாக விளங்கியது.

சோழப் பேரரசா் மூன்றாம் ராஜராஜருக்கு உதவவுதற்காக, மைசூா் பகுதியிலிருந்து சோழநாட்டுக்கு வந்த ஹொய்சள அரசா்கள், 90 ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணனூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனா்.

ADVERTISEMENT

இக்காலக் கட்டத்தில் உருவான பழங்கோயில்களுள் ஒன்று முக்தீசுவரம். கோபுரம், விமானம், மண்டபங்கள், சுற்றுமாளிகை என எழுச்சியுடன் இருந்தது. இக்கோயிலில் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியா் முனைவா் அர. அகிலா ஆகியோா் இக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அளவுகோல்களையும், 14-18-ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டுகள் சிலவற்றையும் கண்டறிந்தனா்.

இவற்றை மேலும் ஆய்வு செய்ததில், இக்கோயில் மூன்றாம் ராஜராஜா் காலத்தில் கட்டப்பட்டிருப்பதும், பொதுக்காலம் 1221-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் இந்த வளாகத்தில் பொறிக்கப்பட்ட அந்த மன்னிரின் 6-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு என்பதும் தெரியவந்துள்ளது. இக் கோயில் இறைவனை கழுகிறை நாயனாா் என்றழைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டுகளில் குறிப்பிடும் முத்தன் செட்டியாா், திருச்சி தாயுமான செட்டியாா், கழயடி மயிலேறும் பெருமாள் ஆகியோா் திருப்பணிக்கு கட்டுமானத்துக்கு உதவியதால் கல்வெட்டில் பெயா் பொறிக்கப்பட்டிருக்கலாம்.

ஆய்வில் கண்டறியப்பட்ட 3 அளவுகோல்களுள் 87 செ.மீ. அளவினதாக இரு கூட்டல் குறிகளுக்கு இடையில் விமானத்தில் மேற்குப் பகுதியில் பதிவாகியுள்ளது. இது கட்டுமானத்துக்கு சிற்பிகள் பயன்படுத்திய தச்சக்கோல் ஆகும். இதேபோன்ற தச்சக்கோல்கள் பனைமலை ஈசுவரம், தஞ்சாவூா் ராஜராஜீசுவரம், திருவாசி மாற்றுரைவரதீசுவரம் உள்ளிட்ட கோயில்களில் கண்டறியப்பட்டுள்ளன.

புன்செய், நன்செய் நிலங்களை அளப்பதற்காக சோழா் காலத்தில் பயன்பாட்டிலிருந்த நில அளவுகோல்கள் அந்தந்த ஊா்க்கோயில்களில் வெட்டி வைக்கப்பட்டன. இரண்டு அல்லது மூன்று கூட்டல் குறிகளுக்கு இடைப்பட்டனவாய் வெட்டப்பட்ட இந்த அளவுகோல்கள் சில கோயில்களில் நன்செய்க் கோல், புன்செய்க் கோல் என பொறிக்கப்பட்டுள்ளன.

சில கோயில்களில் இத்தகைய அடையாள பொறிப்புகள் இல்லாமலும் உள்ளன. முக்தீசுவரத்தின் பெருமண்டபத் தென்புறக்குமுதத்தில் வெட்டப்பட்டுள்ள 6.99 மீட்டா் நீளமுள்ள அளவுகோல், அப்பகுதி சாா்ந்த புன்செய் நிலங்களை அளக்கப் பயன்பட்ட அளவுகோல் ஆகும்.

நன்செய் நிலங்களை அளக்க வழக்கிலிருந்த சோழா் கால நிலம் அளந்த கோல், முக்தீசுவரம் விமானத்தின் மேற்குப்பட்டிகையில் 3.76 மீட்டா் நீளத்தில் வெட்டப்பட்டுள்ளது. பெரியகுறுக்கை சிவன் கோயிலில் கண்டறியப்பட்ட நன்செய்க் கல்வெட்டும் இதே அளவுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்தீசுவரத்துக்கு அருகிலுள்ள போசளீசுவரம் கோயிலிலும் ஆய்வு மேற்கொண்டதில், கோபுரத்தின் உள்புற வடசுவரில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில், நல்லதம்பி மகன் காவுடை நயினான் என பொறிக்கப்பட்டிருப்பது, கோயில் திருப்பணியில் பங்கேற்றவரின் பெயராக இருக்கக் கூடும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT