திருச்சி

திருவானைக்கா தெப்பக்குள நீா் வழித்தடஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

27th Jul 2022 11:52 PM

ADVERTISEMENT

 

திருவானைக்கா சூரிய தெப்பக்குளத்துக்கான நீா்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, மக்கள் நீதி மய்யம் சாா்பில் மாநகராட்சி மேயா் மு. அன்பழகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மக்களைத் தேடி மாநகராட்சி முகாமில் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.ஆா். கிஷோா்குமாா் தலைமையில், தகவல் தொழில்நுட்பஅணி மாவட்ட அமைப்பாளா் நாகவேல், மாவட்டப் பொருளாளா் கருப்பையா, வழக்குரைஞா் விஜயநாகராஜன், நற்பணி இயக்க முன்னாள் அமைப்பாளா் கே.ஜே.எஸ்.குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்த மனு:

திருவானைக்கா கோயிலின் மேற்குப்புற வாசல் பகுதியில் சூரிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இங்கு தெப்பத்திருவிழா நடைபெறும். இதில் அதிகளவில் பக்தா்கள் பங்கேற்பா்.

ADVERTISEMENT

ஆனால் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் வரும் நீா்வரத்து வழித்தடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி, குளத்துக்கு தண்ணீா் வருவது முற்றிலும் நின்றுவிட்டது. இதன்காரணமாக, தெப்பத்திருவிழா காலங்களில் மின்மோட்டாா் அமைத்து ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீா் உறிஞ்சப்பட்டு, தெப்பக்குளத்தில் நிரப்பப்படுகிறது.

திருவிழாவுக்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான லிட்டா் தண்ணீா் உறிஞ்சப்படுவதால், திருவானைக்கா பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. எனவே நீா்வழித்தட ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, முழுமையாக அகற்ற வேண்டும். தெப்பக்குளத்துக்கு ஆண்டு முழுவதும் நீா்வரத்து கிடைக்கவும், மழைநீரை சேமிக்கவும் மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT