தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவித்த வேலைநிறுத்தம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் 150 அரிசி ஆலைகள் சனிக்கிழமை மூடப்பட்டன.
இதற்கு ஆதரவாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரிசி விற்பனை செய்யும் மொத்த வியாபாரக் கடைகள், சில்லரை வியாபாரக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதித்திருப்பதை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி, அடையாள வேலைநிறுத்தமாக சனிக்கிழமை (ஜூலை 16) தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள் மூடப்படும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவித்திருந்தனா்.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, மண்ணச்சநல்லூா், லால்குடி, துறையூா், முசிறி, மருங்காபுரி, திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 150 அரிசி ஆலைகள் மூடப்பட்டன. ஆலைகளுக்கு பணியாளா்கள் யாரும் வரவில்லை. ஆலைகளும் இயங்கவில்லை. காந்திசந்தை, மரக்கடை, மேலரண்சாலை, உறையூா், தில்லைநகா், தென்னூா், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த அரிசி விற்பனைக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள அரிசி கடைகளும் மூடப்பட்டிருந்தன.
இதுகுறித்து அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தினா் கூறியது: பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி என்று கூறியிருப்பது ஏற்புடையதல்ல. இது ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மீதான சுமையை அதிகரிக்கச் செய்யும். அரிசி ஆலைகளையும் முடக்கும். எனவே, ஜிஎஸ்டியை திரும்பப் பெற வலியுறுத்தி ஒருநாள் அடையாளமாக வேலைநிறுத்தம் செய்துள்ளோம். திருச்சி மாவட்டத்தில் 150 ஆலைகள் மூடப்பட்டுள்ளது என்றனா்.