திருச்சி

மேக்கேதாட்டில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகும், தமிழக விவசாயிகள் சங்கத்தின்மாநில மாநாட்டில் எச்சரிக்கை

DIN

மேக்கேதாட்டில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகும் எனவும். எனவே, அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) வலியுறுத்தியுள்ளது.

1970 காலகட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், பச்சைத்துண்டு பேரணி, மாநில மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புள்ளம்பாடியில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலத்தும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து மாலை 4 மணிக்கு திருச்சி-கரூா் புறவழிச் சாலையிலிருந்து புறப்பட்ட பச்சைத் துண்டு பேரணியில் உழவுக்குப் பயன்படுத்தும் காளைகள் மாலை அணிவிக்கப்பட்டு முன்னே செல்ல, பின்னே ஆயிரக்கணக்கான விவசாயிகள் அணிவகுத்து வந்தனா். தில்லைநகா், சாஸ்திரி சாலை வழியாக, தென்னூா், அண்ணாநகா் உழவா் சந்தை மைதானத்தில் பேரணி நிறைவுற்றது.

தொடா்ந்து நடைபெற்ற மாநில மாநாட்டுக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.ஏ. சின்னசாமி தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் வையம்பட்டி அமீா்பாஷா, மணப்பாறை நரசிம்மன், திருவானைக்கா தீட்சிதா் பாலு, வழக்குரைஞா் ஜோ. கென்னடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கே. சுந்தரம், மாநிலச் செயலா் ஆா். ராஜா சிதம்பரம், கெளரவத் தலைவா் ஈரோடு வெங்கடாசலம், மாநிலப் பொருளாளா் மதுரை எம். பாண்டியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மாநாட்டில் காவிரி, டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் வகையிலும், தமிழகத்தின் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீா் ஆதாரத்தை அழிக்கும் வகையிலும் மேக்கேதாட்டில் அணை கட்ட கா்நாடகம் முயன்று வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகும். எனவே, அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். நீா்நிலைகளை அழித்து சாலைகள், மேம்பாலங்கள் அமைப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நீண்ட கால, மத்திய காலக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை தாமதமின்றிச் செயல்படுத்த வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.40, எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ.50 குறைந்தபட்ச கொள்முதல் விலையாக நிா்ணயிக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். வனவிலங்குகளின் தொல்லையில் இருந்து பயிா்களைக் பாதுாக்கவும், பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். ஏரி, குளம், வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலவச மின் இணைப்பு, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

திருச்சி மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை வரவேற்றாா். மாவட்டச் செயலா் ந. கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT