திருச்சி

உறையூர் வெக்காளியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு விழா

6th Jul 2022 09:19 AM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் திருக்குட முழுக்கு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

திருச்சியில் பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் கோயில் உறையூரில் அமைந்துள்ளது. சோழ மன்னர்களின் குல தெய்வமாகவும், திருச்சி நகரின் காவல் தெய்வமாகவும் விளங்கி வரும் இந்த கோயிலில், அம்மன் மூலஸ்தானத்திற்கு மட்டுமே பக்கவாட்டு சுவர் உள்ளது. வானமே மேற்கூரையாக கொண்டுள்ள வெக்காளியம்மன் காற்று, மழை, வெயில் உள்ளிட்ட அனைத்து இடர்பாடுகளையும் தானே தாங்கிக் கொண்டு, மக்களை காத்து வருவதாக ஐதீகம்.

இக்கோயிலில் திருக்குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. அர்த்தமண்டபத்தில் வெள்ளிக் கதவு பொருத்தப்பட்டுள்ளது. கோயில் பிரகாரங்கள், கோபுரங்கள் வர்ணம் பூசி பொலிவு படுத்தப்பட்டுள்ளது. புதிய கருங்கல் அர்த்த மண்டபம், அலங்கார மண்டபம், தூண்களை கலைநயத்துடன் புதுப்பித்தல், அனைத்து மண்டபங்கள், ராஜகோபுரம், விமானங்கள் பழுது நீக்கி புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, ஜூலை 1ஆம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கியது.

ADVERTISEMENT

2ஆம் தேதி அய்யாளம்மன் படித்துறையிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து முதற்கால யாக பூஜைகள் தொடங்கின. 3ஆம் தேதி இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. ஜூலை 4ஆம் தேதி நான்காம் கால யாக பூஜையும், ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. ஜூலை 5ஆம் தேதி ஆறாம் கால யாக பூஜையும், ஏழாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. ஜூலை 6ஆம் தேதி அதிகாலை எட்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.20 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு ஆலயம் வலம் வந்து விமானம், மூலாலயம் சேர்ந்தது.

பின்னர், சிறப்பு பூஜைகளுடன் காலை 6.45 மணிக்கு விமானங்கள், கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  காலை 10 மணிக்கு மஹா அபிஷேகம், கலச பூஜைள் நடைபெறும். மாலையில் வெக்காளியம்மன் வீதி உலா நடைபெறும்.

இந்த கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் சு. ஞானசேகரன், தக்கார் ம. லட்சுமணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT