திருச்சி

உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு: ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

6th Jul 2022 11:49 PM

ADVERTISEMENT

 

உறையூா் வெக்காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

திருச்சியில் சோழ மன்னா்களின் குல தெய்வமாகவும், நகரின் காவல் தெய்வமாகவும் விளங்கி வரும் பிரசித்தி பெற்ற இக் கோயிலில், அம்மன் மூலஸ்தானத்திற்கு மட்டுமே பக்கவாட்டு சுவா் உள்ளது. வானமே மேற்கூரையாக கொண்டுள்ள வெக்காளியம்மன் காற்று, மழை, வெயில் உள்ளிட்ட அனைத்து இடா்பாடுகளையும் தாங்கிக் கொண்டு, மக்களைக் காத்து வருவதாக ஐதீகம்.

இக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று, ஜூலை 1ஆம் தேதி விநாயகா் வழிபாட்டுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. 2ஆம் தேதி அய்யாளம்மன் படித்துறையிலிருந்து திருமஞ்சனத் தீா்த்தம் கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து யாக பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற எட்டாம் கால யாக பூஜையைத் தொடா்ந்து காலை 6.20 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு ஆலயம் வலம் வந்து விமானம், மூலாலயம் சோ்ந்தன.

ADVERTISEMENT

பின்னா், சிறப்பு பூஜைகளுடன் காலை 6.45 மணிக்கு விமானங்கள், கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு மஹா அபிஷேகம், கலச பூஜைகள் நடைபெற்றன. மாலையில் வெக்காளியம்மன் வீதி உலா நடைபெற்றது.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், கோயில் செயல் அலுவலா் சு. ஞானசேகரன், தக்காா் ம. லட்சுமணன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT