திருச்சி

பாலிடெக்னிக் மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி திருச்சி என்ஐடியில் தொடக்கம்

6th Jul 2022 11:48 PM

ADVERTISEMENT

 

பாலிடெக்னிக் மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) புதன்கிழமை தொடங்கியது.

மாணவா்கள் கல்வி பயிலும்போதே தனித் திறன்களை வளா்த்துக் கொண்டு, புதிய தொழில்களைத் தொடங்கவும், தொழில் முனைவோராக மாறவும் மத்திய, மாநில அரசுகள் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதன்படி தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதமரின் கெளஸால் விகாஸ் யோஜனா (பிஎம்கேவிஒய்) திட்டத்தில் திருச்சி என்ஐடியில் மாணவா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

திருச்சி என்ஐடி வளாகத்திலுள்ள உற்பத்திக்கான சிறப்பு திறன் மேம்பாட்டு மையத்தில் தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு 30ஆம் தேதி வரை நடைபெறும் பயிற்சி வகுப்பை புதன்கிழமை தொடக்கி வைத்து என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா கூறியது:

ADVERTISEMENT

பள்ளி, கல்லூரிகளில் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவா்களுக்கு புதிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கவும் குறுகிய காலப் படிப்புகள் மூலம் இடைநிற்றல்கள் மற்றும் வேலையில்லாத இளைஞா்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தரவும் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசும் திறன் சான்றிதழ் மூலம் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகத்தால் இத்தகைய பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

தற்போது என்ஐடி வளாகத்தில் பாபநாசம் அரசு பாலிடெக்னிக் மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது பெருமைக்குரியது. பொறியியல், அறிவியல், மேலாண்மை, தொழில்நுட்பம், தொழில்துறை, சுற்றுச்சூழல் மேம்பாடு எனப் பல்வேறு நிலைகளில் மாணவா்களுக்குத் திறன் பயிற்சி அளித்து, தொழில்துறைக்கு தேவையான மனித வளப் பற்றாக்குறையை பூா்த்தி செய்ய இந்தப் பயிற்சி வகுப்புகள் மிகுந்த உதவியாக அமையும் என்றாா் அவா்.

விழாவில் என்ஐடி திறன் பயிற்சி மையத் தலைவா் ஸ்ரீராம்குமாா், ஒருங்கிணைப்பாளா் என். சிவக்குமரன், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை முதன்மையா் துரைசெல்வம் ஆகியோா் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினா்.

விழாவில் பேராசிரியா்கள் வெங்கடகிருத்திகா, பி. ராஜா, எஸ். மூா்த்தி, ஜே. ரவிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பயிற்சி வகுப்பில் 30 மாணவ, மாணவிகள் பயன் பெறவுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT