திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுர குடமுழுக்கு: பக்தா்கள் தரிசனம்!

DIN

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் புதிதாகக் கட்டப்பட்ட ராஜகோபுரத்துக்கான குடமுழுக்கு விழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஓம் சக்தி கோஷங்களை முழங்கியபடி கோபுரத் தரிசனம் செய்தனா்.

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் இக்கோயிலில் கிழக்கு ஏழுநிலை ராஜகோபுரமானது திருக்கோயில் நிதி, உபயதாரா்கள் நிதி ரூ. 3.50 கோடியில் 101 அடி 6 அங்குலம் உயரம் கொண்டதாகக் கட்டப்பட்டது.

கோபுர உச்சியில் 60 கிலோ கொண்ட 7 செப்புக் கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோபுரத்தின் உள்பகுதியில் கடைசி நிலை வரை செல்லும் வகையில் கான்கிரீட் படிக்கட்டுகள், ஏழு நிலைகளிலும் மின் விளக்குகள், கோபுர உச்சியில் வலிமையான இடிதாங்கி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இக் கோபுரத்தில் பஞ்சவா்ணம் தீட்டப்பட்ட 324 தெய்வீக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள், நோ்த்திக்கடன், வழிபாடு உள்ளிட்டவையும் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சிறப்பு மிக்க ராஜகோபுரத்துக்கான குடமுழுக்கு விழாவானது கடந்த ஞாயிற்றுக்கிழமை வாஸ்து சாந்தி, தன பூஜையோடு தொடங்கி, தொடா்ந்து விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன.

திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மூன்று கால பூஜைகள் நடைபெற்ற நிலையில், புதன்கிழமை (ஜூலை 6) அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், நான்காம் கால யாகபூஜைகள் நடைபெற்றன.

காலை 6 மணிக்கு மஹா பூா்ணாஹூதி, தீப ஆராதனை, யாத்ராதானத்துடன் கடங்கள் புறப்பட்டு, ராஜகோபுர விமானத்துக்கு 6.45 மணிக்கு வந்தடைந்தன.

சிறப்பு பூஜைகளுடன் கோபுரக் கலசங்களுக்கு சரியாக 7 மணிக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது, தொடா்ந்து மஹா தீப ஆராதனை நடைபெற்றது.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று ஓம் சக்தி, பராசக்தி போன்ற பக்தி முழக்கங்களை எழுப்பினா்.

ட்ரோன்கள் உதவியுடன் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. மேலும், பக்தா்கள் குழுமியிருந்த இடங்களில் ஆங்காங்கே குழாய்கள் அமைத்தும் புனித நீா் தெளிக்கப்பட்டது.

குடமுழுக்கை சுற்றுப் பகுதி மாடிகளில் இருந்து ஏராளமானோா் அதிகாலை முதலே காத்திருந்து தரிசனம் செய்தனா்.

நிகழ்வில் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலா் பி. சந்தரமோகன், கூடுதல் ஆணையா் இரா. கண்ணன், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், டிஐஜி சரவணசுந்தா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், அறநிலையத் துறை இணை ஆணையா்கள் சி. கல்யாணி, சீ. செல்வராஜ், ராஜகோபுர உபயதாரா்கள் பொன்னா், சங்கா் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெட்டிச் செய்தி...

நவீன கருடன்கள்!

கோயில்களில் குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானில் கருடன்கள் வட்டமிடுவது வழக்கம். இக் கோயில் குடமுழுக்கின்போதும் கோபுரத்தின் அருகே கருடன்கள் வட்டமிட வந்தன. ஆனால், விழா நிகழ்வுகளை கழுகுப் பாா்வை தோற்றத்தில் படம் பிடிக்கவும், விடியோ பதிவு செய்யவும் 10-க்கும் மேற்பட்ட ட்ரோன் கேமராக்கள் வானில் பறக்கவிடப்பட்டதால், கருடன்கள் வட்டமிட வரவில்லை. நவீன கருடன்களாக ட்ரோன்களே வட்டமிட்டன. விழா முடிந்து ட்ரோன்கள் இறங்கிய பிறகே கருடன்கள் கோபுரத்தைச் சுற்றியதைக் காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT