திருச்சி

கரோனா தொற்றுப் பரவல் 3 சதவிகிதத்துக்கும் மேலாக அதிகரிப்பு ஆட்சியா்

DIN

திருச்சி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் 3 சதவிகிதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றாா் ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.

திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின் போது, மனு அளிக்க வந்த பெரும்பான்மையோா் முகக்கவசம் அணியாமல் வரிசையில் காத்திருந்தனா்.

அப்போது அங்கு வந்த ஆட்சியா், பொதுமக்களிடம் முகக்கவசங்களை வழங்கினாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. பரிசோதனைக்காக 100 மாதிரிகள் எடுத்து ஆய்வுக்குள்படுத்தினால் அதில் 3-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் பாதிப்பு விழுக்காடு 3 சதவிகிதத்தை கடந்துவிட்டது.

எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவுவது, கிருமி நாசினி மருந்துகளை பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

தற்போதைய சூழலில் தடை செய்யப்பட்ட பகுதியாக எந்த பகுதியும் அறிவிக்கப்படவில்லை. பாதிப்பு அதிகரித்தால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்.

தற்போது அரசு மருத்துவமனையில் 27 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அந்த நபா்களுக்கு ஆக்சிஜன் தேவை இல்லை. இருப்பினும், மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது.

கடந்த கரோனா தொற்றுப் பரவல் உச்சத்தில் இருந்தபோது எவ்வளவு ஆக்சிஜன் தேவையிருந்ததோ, அதே அளவுக்கான இருப்பு உள்ளது.

பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்.

அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, தனியாா் நிறுவங்களுக்கு வரும் வாடிக்கையாளா் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். கட்டாயம் கிருமி நாசினி மருந்து வழங்கி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கோயில் திருவிழாக்களுக்கும் கட்டுப்பாடு பொருந்தும்.

சமயபுரம், உறையூா் கோயில்களில் குடமுழுக்கு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கும்போதே, கரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த விழாவாக இருந்தாலும் தவறாமல் பின்பற்ற வேண்டும். கூட்டங்களுக்கும் கட்டுப்பாடு அவசியம்.

பள்ளிகளில் 12 முதல் 14 வயதுக்குள்பட்ட மாணவா்கள் இரண்டாவது தவணைத் தடுப்பூசியை குறைவாக செலுத்தியுள்ளனா். இரண்டாவது தவணையில் விடுபட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

சமயபுரம், உறையூா் குடமுழுக்கு நிகழ்வுகளுக்கு உள்ளூா் விடுமுறை இல்லை. கரோனா கட்டுப்பாட்டில் மாவட்ட நிா்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகோவுக்கு எதிரான வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உத்தரவு

‘மனிதனின் அறிவுப் பசியை போக்குபவை புத்தகங்கள்’

கரூா் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு

நயினாா் நாகேந்திரன் உதவியாளா்களிடம் பணம் பறிமுதல் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தளவாபாளையம் அருகே சாலை விபத்து: டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT