திருச்சி

மாநகரில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.3.83 கோடியில் பணிகள்

5th Jul 2022 01:59 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.3.83 கோடியில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்படவுள்ளன.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சண்முகா நகா் பகுசியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்காக, பொதுமக்களின் பங்களிப்புத் தொகையாக ரூ.5 லட்சம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மேயா் மு. அன்பழகன் ஆகியோரிடம், குடியிருப்பு நலச் சங்க நிா்வாகிகள் திங்கள்கிழமை வழங்கினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் மாநகராட்சி ஆணையா் கூறியது:

ADVERTISEMENT

மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பொது மக்களின் பங்களிப்புடன் நீா்நிலை புனரமைப்பு, தூா்வாருதல் மற்றும் கரையைப் பலப்படுத்துதல், விளையாட்டுத் திடல் அமைப்பு, தெருவிளக்கு பொருத்துதல், பூங்கா உருவாக்குதல் மற்றும் மற்றும் மேம்படுத்துதல், எல்இடி மின்விளக்கு அமைத்தல்,

சிசிடிவி’கேமரா பொருத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய மரக்கன்று நடுதல், மாநகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்துதல், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கட்டடங்களில் சுற்றுச்சுவா் மற்றும் பிற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் புனரமைத்தல், மழைநீா் வடிகாலுடன் கூடிய சாலை அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

மதிப்பீட்டுத் தொகையில் பொதுமக்கள் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்குத் தொகையை மட்டுமே செலுத்தினால், மீதித் தொகையை அரசே வழங்கி பணியை மேற்கொள்ளும்.

இத்திட்டத்தின் கீழ் தனி நபராகவோ, குழுவாகவோ, குடியிருப்போா் நல சங்கங்கள் மூலமாகவோ, பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள் மூலமாகலோ பணியினை மேற்கொள்ளலாம்.

இத் திட்டத்தின் மூலம் 2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கு அரசு நிா்ணயிக்கப்பட்ட இலக்கீடு ரூ.3 கோடியே 82 லட்சமாக உள்ளது.

இதுவரை பொதுமக்களிடம் பெறப்பட்டுள்ள தொகை ரூ.1 கோடியே 90 லட்சமாகும். மீதம் ரூ.1 கோடியே 91 லட்சம் உள்ளதால்,

தங்களது பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அமைத்தல் அல்லது மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு குடியிருப்போா் நலச்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சியை அணுகி உடனடியாக தேவைப்படும் வசதிகளை பெற்றுப் பயன்பெறலாம் என்றாா் ஆணையா்.

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT