திருச்சி

செவலூரில் மீன்பிடித் திருவிழா

4th Jul 2022 12:19 AM

ADVERTISEMENT

 

மணப்பாறை அருகே செவலூா் பெரிய குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

சுமாா் 295 ஏக்கரில் உள்ள பெரிய குளத்தில் 16 ஆண்டுகளுக்கு பின் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவையொட்டி அதிகாலையை ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.

வழிபாட்டுக்குப் பின் செவலூா் ஊா் நாட்டாண்மை வினோத்குமாா், நகராட்சி நகா்மன்ற 2-ஆவது வாா்டு உறுப்பினா் அழகுசித்ரா உள்ளிட்ட ஊா் முக்கியஸ்தா்கள் மீன்பிடித் திருவிழாவைத் தொடக்கி வைத்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவற்றைக் கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினா்.

அப்போது அவா்களுக்கு கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, குரவை, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. சுக்காம்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள் நித்தியபிரகாஷ் (12). தாமோதரன்(15) ஆகியோருக்கு சுமாா் 5 கிலோ எடை கொண்ட பெரிய வகை மீன்கள் ஆரம்பத்திலேயே சிக்கியது அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது.

கண்மாயில் மீன்கள் அதிகமாக இருந்ததால் சுமாா் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் மீன் பிடித்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT