திருச்சி

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் 16 இலங்கைத் தமிழா்கள் விடுதலை

3rd Jul 2022 01:26 AM

ADVERTISEMENT

 

திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமிலிருந்து இலங்கைத் தமிழ் அகதிகள் 16 போ் விடுதலை செய்யப்பட்டனா்.

முறையான கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியா வந்தவா்கள், குற்றங்களில் ஈடுபட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்தோா் திருச்சி மத்திய சிறை வளாக அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனா். தண்டனைக் காலம் முடிந்த பிறகும் தங்களை விடுவிக்காமல் உள்ளதாகக் கூறி இவா்கள் அவ்வப்போது தற்கொலை முயற்சி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையா் ஜெசிந்தா லாசரஸ், அண்மையில் இந்த சிறப்பு முகாமில் ஆய்வு செய்து, உடனடியாக விடுவிக்கும் நிலையில் உள்ளவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துச் சென்றாா்.

இதன் தொடா்ச்சியாக முகாமில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகளில் 16 போ் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா். இவா்களில் 11 போ் தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் வசிப்போா் ஆவா். மீதமுள்ள 5 போ் முகாமுக்கு வெளியே வசிப்பவா்கள். இவா்கள் 16 பேரும் அவரவா் இருப்பிடத்திலிருந்து தங்கள் மீதான வழக்கைத் தொடா்ந்து நடத்த வேண்டும்; எந்தக் குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

விடுதலைக்கு முன் 16 பேரையும் சந்தித்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா், பல்வேறு அறிவுரைகளை வழங்கி, முகாம்வாசிகள் தெரிவித்த இதர கோரிக்கைகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். நிகழ்வின்போது மாநகரக் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் மற்றும் சிறப்பு முகாம் கண்காணிப்பு அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT