திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்க டாம்கோ மூலம் நிகழாண்டு (2022-23) ரூ. 4.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விண்ணப்பதாரா் 18 வயது பூா்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறமாக இருந்தால் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாக இருந்தால் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
எந்தத் தொழில் செய்ய கடன் பெற்றாரோ அந்தத் தொழிலை செய்ய மட்டுமே பணத்தைப் பயன்படுத்த வேண்டும்.
சாதிச்சான்று, ஆதாா் அட்டை, வருமான சான்று, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமா்பிக்கப்பட வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் உண்மைச் சான்றிதழ், ஒளிப்பட நகல்களையும் சமா்ப்பிக்க வேண்டும். தனிநபா் கடனாக அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை வழங்கப்படும். கைவினைக் கலைஞா்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். சுய உதவிக் குழு கடனாக ஒருவருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு ரூ.30 லட்சம் வரை கல்விக் கடனும் வழங்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினா் விண்ணப்பங்களை பெற்று, பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமா்பித்து பயன்பெற ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.