திருச்சி

சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்களுக்குப் பாராட்டு

2nd Jul 2022 04:47 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய மருத்துவா் தின விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்களுக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

அப்போது அவா் பேசியது: மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியில் ஈடுபடும், கரோனா காலத்திலும் தங்கள் உயிரைத் துச்சமென நினைத்து உழைக்கும் மருத்துவா்களை நாம் போற்றி வணங்க வேண்டும்.

இரவு, பகல் பாராமல் எந்நேரமும் ராணுவம் போல வெள்ளை உடையில் பணியாற்றுகிற, நோய்த் தடுப்புக்கான அரசின் நடவடிக்கைகளில் தளகா்த்தா்களாக, சிப்பாய்களாக, முன்கள வீரா்களாகப் பணியாற்றி கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்த மருத்துவா்களை வாழ்த்துகிறோம்.

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு வலிமைபெற அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மருத்துவா்களின் ஒத்துழைப்பு என்றும் அதே அா்ப்பணிப்புடன் தொடர வேண்டும்.

ADVERTISEMENT

மக்களின் அரசு, மக்களின் உயிா்காக்கும் மருத்துவா்களுக்கான அரசாகவும் என்றும் இருக்கும். நீங்கள் மக்களைக் காக்கும் மகத்தான பணியைத் தொடருங்கள்; மாவட்ட நிா்வாகம் உங்களைப் பாதுகாக்கும் முன்கள வீரராகச் செயலாற்றும்; துணை நிற்கும் என்றாா் அவா்.

பின்னா் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகத் துறையில் சிறப்பாகப் பணிபுரியும் மருத்துவா் பி. பிரபாகரன், மணப்பாறையில் உள்ள சிந்துஜா மருத்துவமனையில் கரோனா காலத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த மருத்துவா் பி. கலையரசன் ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் டி. நேரு,

மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலா் வி. மலைதுரை, இந்திய மருத்துவச் சங்க திருச்சி செயலா் ஆா். மோகன், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மாவட்டத் திட்ட அலுவலா் எஸ். ரவிசங்கா், புலனாய்வு அலுவலா் எஸ். ஜீவன்குமாா்,

அரசு மருத்துவமனை மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் எனப் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT