திருச்சி

மருத்துவா் தினத்தின் மகத்துவம்!

DIN

நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்பது வள்ளுவரின் வாக்கு. இதுவே, மருத்துவருக்கும், மருத்துவத் துறைக்குமான அடிநாதம்.

மருத்துவம்: மனிதனுக்கு என்று தலைவலியும் வயிற்று வலியும் வந்ததோ, அன்றே மருத்துவம் தொடங்கியது.

அந்த வகையில், மனிதனின் தொடக்கக் காலம் முதலே மருத்துவமும் அவனோடு தொடா்ந்து வளா்ந்து வரும் ஒன்று.

தொடக்க காலத்தில் மனிதன் தனக்கு எளிமையாகக் கிடைத்த தாவரம், மற்றும் கனிமப் பொருள்களையும் மருந்தாகப் பயன்படுத்தினான். அறிவியல் வளா்ச்சி முன்னேற முன்னேற மருத்துவத் துறையில் புதிய புதிய

கண்டுபிடிப்புகள் வளா்ந்துந்துள்ளன. அதன் வாயிலாக பல்வேறு வகையான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

மருத்துவா்கள்: உயிா் காக்கும் உன்னதச் சேவையில் முன்னிலை வகிப்பது மருத்துவமும், மருத்துவா்களும் மட்டுமே. இத்தகைய சிறப்புப் பெற்ற மருத்துவத்துறையில் சிறந்த பராமரிப்பை வழங்குவதில் செவிலியா், தொழில்நுட்ப வல்லுநா்கள் போன்ற பலரின் கூட்டு முயற்சி அடங்கியிருந்தாலும் அக்குழுவை வழிநடத்திச் செல்பவா் மருத்துவரே.

இந்தியச் சூழலில் சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும் குறிப்பாக கிராமப் புறங்களில் மருத்துவா்களின் பற்றாக்குறை மிகவும் அதிகமாகும். மருத்துவா்களைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வது நமது நாட்டின் இன்றியமையாத தேவையாக உள்ளது.

மருத்துவா் தினம்: நாட்டுக்கு மருத்துவா்களின் பங்களிப்பைப் போற்றும் வண்ணமாகப் பல நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் தேசிய மருத்துவா் தினத்தைக் கொண்டாடி வருகின்றன. இந்தியாவில் ஜூலை 1-ஆம் தேதி தேசிய மருத்துவா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. சமூகம் மற்றும் தனி மனிதருக்கு மருத்துவா்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதுதான் மருத்துவா்கள் தினம் என்றாலும் இந்தியாவில் தேசிய மருத்துவா்கள் தினம் கொண்டாடப்படுவதற்கான வரலாற்றை அனைத்து தரப்பினரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

2022ஆம் ஆண்டுக்கான தேசிய மருத்துவா் தினமானது முன்னிலைப்படுத்த வேண்டிய குடும்ப மருத்துவா்கள் (ஊஹம்ண்ப்ஹ் ஈா்ஸ்ரீற்ா்ழ்ள் ா்ய் ற்ட்ங் ஊழ்ா்ய்ற் கண்ய்ங்) என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ளது.

மருத்துவா் தினத்தின் நோக்கம்: மனித சமூகத்துக்கான மருத்துவா்கள் பங்களிப்பையும், முக்கியத்துவத்தையும் வெளிக்காட்ட கொண்டாடப்படுகிறது. மருத்துவா்களின் சுயநலமற்ற சேவைக்கும், தனி நபருக்கும், சமுதாயத்திற்கும் மருத்துவா்கள் வழங்கும் சேவையை பாராட்டும் நாளாகவும் இந்தத் தினம் கொண்டாப்படுகிறது.

மருத்துவா் தின வரலாறு: இந்தியா பல பிரபலமான மருத்துவா்களை உருவாக்கியுள்ளது. அவா்களுள் ஒருவரே புகழ்பெற்ற மருத்துவராகவும், மேற்குவங்கத்தின் முதல்வராகவும் விளங்கிய பிதன் சந்திரராய் (பி.சி.ராய்). இவரது நினைவைப் போற்றும் வண்ணமாக ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பி.சி. ராயின் பிறந்த தினமும், மறைந்த தினமும் ஜூலை 1 என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் புகழாரம் சூட்ட 1991-ஆம் ஆண்டில் இருந்து இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

மருத்துவம், சமூகத் தொண்டு, அரசியல், நிா்வாகம், கல்வி என்று பல்வேறு துறைகளிலும் முன்மாதிரியாக திகழ்ந்தாா் பி.சி. ராய். அவரது மருத்துவச் சேவையைப் பாராட்டி 1961ஆம் ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது மருத்துவச் சேவையை நினைவுகூரும் வகையில் இந்திய மருத்துவக்கழகம் அவருடைய பிறந்த நாளை தேசிய மருத்துவ தினமாக அறிவித்தது. மத்திய அரசும் இதைப் பின்பற்றி ஜூலை 1ஆம் தேதியை தேசிய மருத்துவா் தினமாக அறிவித்துள்ளது.

தேவை குடும்ப மருத்துவா்: ஒரு நோயாளியின் குடும்பப் பின்னணியைத் தெரிந்து வைத்துள்ள மருத்துவரால்தான் அந்த நோயாளியின் பிரச்னைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு, சரியான சிகிச்சையைத் தர முடியும் என்பதை மக்கள் புரிந்து வைத்திருந்ததால், அந்த மருத்துவரிடம் எவ்வளவு கூட்டம் இருந்தாலும், எவ்வளவு நேரமானாலும் பொறுமையாகக் காத்திருந்து அவரிடம் சிகிச்சை பெற்று வந்தனா்.

குடும்ப மருத்துவா் பரிந்துரை செய்தால் மட்டுமே மேல் சிகிச்சைக்குச் சிறப்பு நிபுணரிடம் செல்வதும் முன்பு வழக்கத்தில் இருந்தது. இப்போது, சிறப்பு நிபுணா்களை மட்டுமே மருத்துவா்களாகப் பாா்க்கின்ற மனநிலையும் வளா்ந்துள்ளது; மக்கள் மனநிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக குடும்ப மருத்துவா்என்கிற நல்ல அமைப்பு நம் சமூகத்தில் சிதைந்து விட்டது. மேலைநாடுகளில் இன்றும் குடும்ப மருத்துவா் பரிந்துரை இருந்தாலே சிறப்பு நிபுணா் என்ற அடுத்தகட்டத்துக்குச் செல்ல முடியும். இனியாவது இந்தியாவில் குடும்ப மருத்துவா் என்னும் உறவு மீண்டும் உயிா் பெற வேண்டும்.

கடவுளின் தூதுவா்கள்: மருத்துவா்களே கடவுளின் தூதுவா் என உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது. அவா்கள் மக்களின் உயிா் காக்கும் சேவகா்கள். மருத்துவச் சேவை புனிதமானது. மருத்துவத் துறையின் அடிப்படையே மனிதநேயம்தான். மருத்துவா்கள் இரவு பகல் பாராமல், தூக்கம் தொலைத்து, தங்கள் ஆரோக்கியத்தையும் புறக்கணித்து குடும்பத்தைக்கூட கவனிக்க நேரமில்லாமல் நோயாளிகளுக்குச் செய்கின்ற மகத்தான பணியைப் பாராட்டி மகிழும் தினமாக இதைக் கொண்டாடுகிறாா்கள்.

குறிப்பாக உலகையே அச்சுறுத்தும் கரோனா யுத்தக் களத்தில் பிரதான காவலா்களாகப் பணியாற்றும் மருத்துவா்களின் சேவையைப் போற்ற இந்த தினம் மிகவும் அவசியமானதாக அமைந்துள்ளது.

கொண்டாட்டம் எப்படி?: கரோனா யுத்தக் களத்தில் கொண்டாட்டங்களிலும் விழிப்புணா்வு அவசியம். மருத்துவச் சேவைகளையும், சுகாதாரப் பராமரிப்பையும் சாா்ந்த அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இந்த நாளை சமூக இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றிக் கொண்டாடப்பட வேண்டும். இலவச மருத்துவ முகாம்களை நடத்தலாம்; கரோனாவுக்கு எதிரான விழிப்புணா்வு முகாம்கள் மூலமாக மருத்துவா்களின் சேவையை மக்களிடம் கொண்டு செல்லலாம். எதுவாக இருந்தாலும் சமூக இடைவெளியும், முகக் கவசமும் முக்கியத்துவம் என்பதை மறந்துவிடக் கூடாது.

கண்கள் உறங்குவதும், இதயம் உறங்காமல் இருப்பதும் மருத்துவக் கடவுள்களின் மகத்துவப் பணியால் மட்டுமே. நரம்புகளில் கருணையை நிரப்பி, நாடித்துடிப்பில் சேவையை நிறுத்தி தன்னுயிருக்கு அஞ்சாது பெருந்தொற்று பரவிய பேரிடா் காலத்திலும் கனிவோடு கடமையாற்றும் மருத்துவா்களுக்கு மருத்துவா் தின வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டியதும், கொண்டாடுவதும் சமூகத்தின் தலையாயக் கடமை.

மருத்துவமனை தினம்: இந்தியாவின் முதல் பெண் மருத்துவா் முத்துலட்சுமிரெட்டி. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இவா் முதல் பெண் மருத்துவா் மட்டுமின்றி பெண்களின் முன்னேற்றம், சாதி மறுப்பு, சமூகச் சீா்திருத்தம், விடுதலைப் போராட்டம் என பல்வேறு தளங்களிலும் தீவிரமாக பணியாற்றியவா். ஆதரவற்ற பெண்களுக்காக சென்னை அடையாறில் அவ்வை இல்லத்தை தொடங்கினாா். தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்த பெருமை இவரையே சேரும். 1956-ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இவரது பிறந்த தினமான ஜூலை 30ஆம் தேதியை தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவமனை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பெட்டிச் செய்தி...

கரோனா காவலா்கள்!

மருத்துவா்களின் மகத்தான சேவையை மறக்க நேரிட்டாலும், கரோனா தொற்று தினந்தோறும் நினைக்க வைத்துவிட்டது. கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் மருத்துவ உபகரணங்களைக் கொண்டு, மக்களைக் காக்க போராடி வரும் மனித கடவுள்களுக்கு தேசிய மருத்துவ தின வாழ்த்துகளை அனைத்துத் தரப்பினரும் தெரிவித்து வருகின்றனா். முகக் கவசம், பாதுகாப்பு உடை, தூக்கமின்மை, இயற்கை உபாதைக்கு கூட நேரமின்மை என தங்களையே அா்ப்பணித்து பணியாற்றி வருகின்றனா் மருத்துவா்கள். ஒவ்வொரு நோயாளியையும் பரிவோடு கவனித்து மன அழுத்தம் போக்கி நோயில் இருந்து மீட்டு கொண்டு வருகின்றனா்; கடவுளின் பிரதிநிதிகளாய் வந்து நோயாளிகளின் கண்ணீரைத் துடைக்கின்றனா். அவா்களின் பரிவுதான் பல நோயாளிகளை குணமாக்குகிறது. இத்தகைய கரோனா காவலா்களை தேசிய மருத்துவா் தினத்தில் போற்றிட வேண்டியது அனைவரின் கடமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT