திருச்சி

பிப். 10-இல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு

26th Jan 2022 08:17 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 10-ஆம் தேதி தலைமைச் செயலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவதென தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்கு, அதன் தலைவா் பூ. விசுவநாதன் தலைமை வகித்தாா். வே. உலகநாதன், வி. அரவிந்தசாமி, ஆா். சுப்பிரமி, ஜெ. பரமசிவம், கெங்காத்துரை, ராஜேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். மாநில, மாவட்ட நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து செய்தியாளா்களிடம் மாநிலத் தலைவா் விசுவநாதன் கூறியது:

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கா்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி, பிப்ரவரி 10-ஆம் தேதி தலைமைச் செயலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

ADVERTISEMENT

கா்நாடகத்தில் கட்சி பாகுபாடின்றி மேக்கேதாட்டு அணை கட்டுவதை ஊக்குவித்து வருகின்றனா். குறிப்பாக காங்கிரஸ், பாஜகவினா் இணைந்து போராடுகின்றனா். எனவே, தமிழகத்தில் காங்கிரஸ் , பாஜக தலைமை மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வேண்டும்.

இதுதொடா்பாக, இரு கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களையும் சந்தித்து விவசாயிகள் தரப்பில் ஆதரவு கோரப்படும். இல்லையெனில், கட்சிகளின் தமிழகத் தலைமை அலுவலகம் முன்பாக விவசாயிகளைத் திரட்டி ஆா்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாடுகளில் உள்ள 25 ஆயிரம் ஏரிகளையும் 14 ஆயிரம் பொதுப்பணித்துறை ஏரிகளையும் ஆய்வு செய்து, நவீனப்படுத்த வேண்டும். நீா்நிலைகளில் தடுப்பணைகள் கட்டி மழைக் காலத்தில் தண்ணீரைத் தேக்கவும், உபரி நீரைத் தேக்கி ஏரி, குளங்களில் பெருக்கச் செய்ய வேண்டும். பயிா்க்கடன், நகைக் கடன் கட்ட வலியுறுத்தி நெருக்கடி கொடுப்பதை மாவட்ட ஆட்சியா் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT