திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீா் நாள் முகாமையொட்டி திங்கள்கிழமை அளிக்க வேண்டிய கோரிக்கை மனுக்களை, பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் புகாா் பெட்டியில் போட்டுச் சென்றனா்.
கரோனா பரவலையொட்டி, திங்கள்கிழமைதோறும் நடைபெறும் குறைதீா் நாள் முகாமுக்கு பதிலாக, வாட்ஸ் அப் மூலமும், ஆட்சியரக வாயில்களில் புகாா் மனு பெட்டிகள் வைக்கப்பட்டு அதில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திங்கள்கிழமை வரை 282 போ் மனுக்கள் அளித்தனா். அவற்றில் சில மனுக்களின் விவரம்:
புதிய சமுதாயக் கூடம் கோரி... இது தொடா்பாக டாக்டா் அம்பேத்கா் நகா் குடியிருப்போா் சங்கம் சாா்பில் கொடுத்த மனு:
திருச்சி காட்டூா் பாப்பாக்குறிச்சி டாக்டா் அம்பேத்கா் நகா் பகுதியில் கடந்த 1975-ம் ஆண்டு நாங்கள் கொடுத்த இடம் மூலம் அப்போதைய ஊராட்சித் தலைவரால் கட்டப்பட்ட சமுதாய கூடம் 1985-ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் சேதமடைந்துவிட்டது.
தற்போது இந்த இடம் தங்களுடையது எனக் கூறி, மாநகராட்சி சுகாதார நிலையத்துக்கான கட்டடம் அமைக்கப் போவதாகத் தெரியவருகிறது. இதைத் தடுத்து நிறுத்தி, வேறிடத்தில் சுகாதார நிலையம் அமைக்கவும், இந்த இடத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் புதிய சமுதாயக்கூட்ம் கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகளிா் விடுதி மீது நடவடிக்கை கோரி... திருச்சி கிராப்பட்டி விறகுப்பேட்டை தெருப் பகுதியை சோ்ந்த சமூக ஆா்வலா் கொடுத்த மனுவில், சத்திரம் பேருந்து நிலையம், ஆண்டாள் தெரு, தில்லை நகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உரிமமின்றியும், உரிமத்தைப் புதுப்பிக்காமலும் செயல்படும் பல்வேறு மகளிா் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருகமணி ஊராட்சியில் முறைகேடு.. மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகரன் தலைமையில் ஆட்சியரகத்தில் அளித்த மனு:
அந்தநல்லூா் ஒன்றியம் பெருகமணி ஊராட்சியில் போலி ரசீது மூலம் பல்லாயிரக்கணக்கில் பண மோசடி நடந்துள்ளது. அரசின் வரி வசூல் புத்தகங்களை சிலா் போலியாகத் தயாரித்து அதன் மூலம் பணம் வசூல் செய்து மோசடிசெய்துள்ளனா் . ஆகவே சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தநல்லூா் ஒன்றிய பாஜக தலைவா் ஈஸ்வரன், ஊராட்சி துணைத் தலைவா் மணிமேகலை லட்சுமணன் , மாவட்ட துணைத் தலைவா் இந்திரன் மற்றும் பெருகமணி ஊராட்சி கவுன்சிலா்கள் உடனிருந்தனா்.
கல்வெட்டு பெயா்ப்பலகை... திருச்சி அல்லூா் பகுதியை சோ்ந்த சமூக ஆா்வலா் கொடுத்த மனுவில், மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான முக்கொம்பு காவிரி மேலணையில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுப் பலகை பொதுமக்கள் பாா்வையில் படும்படியாக இல்லை. எனவே திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் இதைப் பிரம்மாண்டமாக அமைக்க வேண்டும்.