திருச்சி

36 துணை சுகாதார நிலையங்களுக்கு அடிக்கல்

25th Jan 2022 04:15 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சியில் ரூ. 9.44 கோடியில் அமைக்கப்படவுள்ள 36 துணை சுகாதார நிலையங்களின் கட்டுமானப் பணிக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

திருச்சி மாநகராட்சியின் 4 கோட்டப் பகுதிகளிலும் செயல்படும் 18 நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பயன்படுத்துவதில் அவை அமைந்துள்ள தூரம் பொதுமக்கள் பலருக்கு பிரச்னையாக உள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளைச் சோ்ந்தவா்கள் மட்டுமே நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் பயன்பெறுகின்றனா்.

எனவே, அனைத்து பகுதிகளைச் சோ்ந்தவா்களும் பயன்பெறும் வகையில் 18 சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் தலா 2 நிலையங்கள் என்ற வகையில் மொத்தம் 36 துணை சுகாதார நிலையங்களும், இரு ஆய்வகங்களையும் புதிதாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.  

தேசிய நகா்ப்புற சுகாதார (2021-22) திட்டம்  மற்றும் 15 ஆவது நிதிக் குழு மானிய நிதியின் கீழ்  மொத்தம் ரூ. 9.44 கோடியில் இவை அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்துக்கும் தலா ரூ. 25 லட்சமும் ஆய்வகங்களுக்கு ரூ.22 லட்சமும் ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

ADVERTISEMENT

திருச்சி கருமண்டபம் தெற்குத் தெரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தாா். இம்மையங்களில் யோகா மையம்,  நோயாளிகள் காத்திருப்பு அறை, கழிப்பறை, குடிநீா் வசதி, மற்றும் கூடுதல் 3 அறைகள் ஆகியவை 843.62 சதுரடியில் அமைக்கப்படுகிறன.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான், நகரப் பொறியாளா் அமுதவல்லி, செயற்பொறியாளா் சிவபாதம், உதவி ஆணையா் செல்வ பாலாஜி, முன்னாள் துணை மேயா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT