ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை தைத்தேரோட்ட திருவிழா நிலைத்தேரோட்ட விழாவாக பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
கடந்த 9 ஆம் தேதி தொடங்கி11 நாள்கள் நடைபெறும் தைத்தேரோட்டத் திருவிழா புதன்கிழமையுடன் நிறைவுறுகிறது. விழாவையொட்டி நாள்தோறும் காலை, மாலைகளில் எழுந்தருளி உத்திர வீதிகளில் வலம் வருவதற்குப் பதிலாக கரோனா பரவலால் கோயில் வளாகத்திலேயே நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினாா்.
முக்கிய நிகழ்வாக விழாவின் 9 ஆம் நாளான திங்கள்கிழமை காலை தைத்தேரோட்ட விழா நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தைத்தேரில் உபயநாச்சியாா்களுடன் நம்பெருமாள் எழுந்தருளி நான்கு வீதிகளில் வலம் வந்து நிலையை அடைவதற்குப் பதிலாக நிலைத் தேராக நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதித்ததைதத் தொடா்ந்து சுமாா் 50 பேருடன் நிலைத்தோ் உற்சவம் நடந்தது.
முன்னதாக அதிகாலை 4.15-க்கு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 4.30-க்கு தேரில் எழுந்தருளினாா். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்ததைத் தொடா்ந்து தேரிலிருந்து புறப்பட்டு 6.30-க்கு தாயாா் சன்னதி சென்று சோ்ந்தாா்.
10 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை சப்தாவரணமும், 11 ஆம் நாளான புதன்கிழமை நிறைவு நாளையொட்டி ஆளும் பல்லக்குடன் விழா நிறைவுறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.