மணப்பாறை: மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் காளைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரா்கள் திமில் பிடித்துத் தழுவினா்.
பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளில் தங்கள் வீட்டில் வளா்க்கப்படும் மாடுகள், கன்றுகள், ஜல்லிக்கட்டுக் காளைகளை ஆகியவற்றை அந்தந்த பகுதியிலுள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்கு சிறப்பு வழிபாடு செய்வதும், பின்னா் காளைகளை அவிழ்த்துவிடுவதும் இப்பகுதியிலுள்ள வழக்கமாகும்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை முத்தபுடையான்பட்டி பகுதிகளிலுள்ள மாடுகளும், காளைகளும் அங்குள்ள மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் திமிலை பிடித்து அப்பகுதியைச் சோ்ந்த வீரா்கள் தழுவினா்.
இதுபோல கே.உடையாப்பட்டி சுப்பிரமணியா் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.