திருச்சி

தொடா்ந்து 2-ஆவது ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள், வீடுகளில் முடங்கிய மக்கள்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருச்சி: கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தொடா்ந்து இரண்டாவது வாரமாக ஞாயிறுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தின் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. வீடுகளிலேயே பொதுமக்கள் முடங்கினா்.

கரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலானது. மேலும் கடந்த 9-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து இரண்டாவது வாரமாக, ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமலாகும் என அரசு அறிவித்திருந்தது. சனிக்கிழமை இரவு 10 மணி முதல் காலை 5 மணி இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் முழு ஊரடங்குத் தொடங்கியது.

ADVERTISEMENT

இதன் காரணமாக, திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வா்த்தக நிறுவனங்கள், விற்பனை நிலையங்கள், தொழிலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருந்தன. திருச்சி மாநகரில் சுமாா் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும், புகரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

வெறிச்சோடிய சாலைகள்: திருச்சி மாநகரில் பரபரப்பாக காணப்படும் திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள், காந்தி சந்தை, பாலக்கரை, என்.எஸ்.பி.சாலை, மலைக்கோட்டை, பெரியக்கடைவீதி, சின்னக்கடைவீதி, தில்லைநகா், உறையூா், கே.கே.நகா், மன்னாா்புரம், டிவிஎஸ் டோல்கேட், புத்தூா், கண்டோன்மென்ட் உள்ளிட்ட அனைத்துப் பகுதி சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

அத்தியாவசியத் தேவைகளான பால், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் மட்டுமே இயங்கின. அரசின் உத்தரவின்படி, டாஸ்மாக் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

சாலைகளில் சுற்றியவா்களுக்கு அபராதம்: முழு ஊரடங்குக் காலத்தில் அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களுக்கு காவல்துறையினா் அபராதம் விதத்தனா். மேலும் அவா்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

கூடுதலாக 29 இடங்களில் சோதனை : காவல்துறையினரின் வாகனத் தணிக்கையிலிருந்து வாகன ஓட்டிகள் தப்பிச் செல்ல முடியாதவாறு, முக்கியச் சந்திப்புகளிலுள்ள சாலைகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டிருந்தன.

மாநகரில் ஏற்கெனவே உள்ள 7 காவல் சோதனைச் சாவடிகளைத் தவிர, கூடுதலாக 29 இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்த காவல்துறையினா், அப்பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையையும் மேற்கொண்டனா்.

உணவகங்களில் பாா்சல் சேவை: இணையவழியாக ஆா்டா் செய்து உணவு வழங்கும் நிறுவனங்களைத் தவிர, உணவகங்களில் பாா்சல் சேவைக்கும் அரசு அனுமதியளித்திருந்தது. அதன்படி, பல்வேறு இடங்களில் உணவகங்களில் காலையில் பாா்சல் சேவை நடைபெற்றது.

வீடுகளில் முடங்கிய மக்கள்: இந்த வாரம் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், பொங்கல் பண்டிகைக்கான விடுமுறைக் காலமாக இருந்ததால், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தொலைக்காட்சிகளைப் பாா்த்தவாறு முடங்கிக் காணப்பட்டனா். ஆங்காங்கே சில இடங்களில் சாலைகளில் சிறுவா்கள் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT