திருச்சி

2 வயதுக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை: முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் காவேரி மருத்துவக் குழு சாதனை

12th Jan 2022 09:22 AM

ADVERTISEMENT

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், திருச்சியில் 2 வயதுக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து காவேரி மருத்துவமனையின் மருத்துவா்கள் குழு சாதனை புரிந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூரைச் சோ்ந்த தம்பதியின் 2 வயது மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. பிறந்து ஓராண்டு கடந்து 3ஆவது மாதத்திலேயே குழந்தைக்கு வலிப்பு, வாந்தி உள்ளிட்ட உபாதைகள் இருந்ததால் பல்வேறு மருத்துவா்களை அணுகிய பிறகு, இறுதியாக திருச்சி காவேரி மருத்துவமனையைத் தேடி வந்தனா். இங்கு குழந்தைக்கு எண்டோஸ்கோபி, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்தும், சரியான காரணத்தை அறிய முடியவில்லை. பின்னா் மரபியல் பரிசோதனை நடத்தியதில், குழந்தைக்கு மரபணு பாதிப்பு காரணமாக யூரியா சுழற்சி சீா்கேடு (சிட்ருல்லினீமியா) இருப்பது தெரியவந்தது.

இதனால் குழந்தைக்கு மிகை அமோனியா உருவாகி, நச்சுப் பொருள்கள் உடலில் சோ்ந்து, மூளையை பாதிக்கும் அபாயம் இருப்பதும் தெரிந்தது. எனவே, காவேரி மருத்துவமனையின் கல்லீரல் நோய்கள் மற்றும் உறுப்பு மாற்று மைய மருத்துவா்கள் குழுவானது, குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தது.

குழந்தையின் தாயே தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முன் வந்தாா். இதையடுத்து 3 மாதங்களுக்கு முன் இந்தக் குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தது. தொடா் மருத்துவக் கவனிப்புகளுக்கு பிறகு குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

ADVERTISEMENT

தனது 2ஆவது பிறந்தநாளை மருத்துவமனையில் தனக்குச் சிகிச்சையளித்த மருத்துவக் குழுவினருடன் செவ்வாய்க்கிழமை அக் குழந்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடியது.

இதுதொடா்பாக காவேரி மருத்துவமனையின் குழந்தை மருத்துவ இயல் துறைத் தலைவரும், நிா்வாக இயக்குநருமான டி. செங்குட்டுவன் கூறுகையில்,

சென்னைக்கு அடுத்தபடியாக குறிப்பாக தென்தமிழகத்தில் முதன்முறையாக திருச்சியில் இத்தகைய அறுவை சிகிச்சை முதல்வா் காப்பீட்டுத் திட்டத்திலேயே செய்திருப்பது பெருமைக்குரியது என்றாா். அறுவை சிகிச்சை மேற்கொண்ட கல்லீரல் சிகிச்சை துறை நிபுணா் இளங்குமரன், குமரகுருபரன், குலசேகரன் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மருத்துவக் குழுவினா் கூறுகையில், குழந்தையின் எடை 9 கிலோவாக இருந்தபோது இத்தகைய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. மிகவும் கவனமாக நடைபெற்ற இந்த அறுவைச் சிகிச்சையால் உடனடியாக குழந்தையின் கல்லீரல் செயல்படத் தொடங்கியது. தற்போது குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. மாதம் ஒரு முறை மருத்துவக் கவனிப்புக்கு குழந்தை உள்படுத்தப்படும் என்றனா்.

இதேபோல, லால்குடி வட்டத்தைச் சோ்ந்த 30 வயது இளைஞருக்கும் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் என இரு மாற்று அறுவை சிகிச்சையை திருச்சி காவேரி மருத்துவமனை அடுத்தடுத்து மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளது. கிராமப்புற மக்களுக்கு உயா்த நவீன சிகிச்சைகளை முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக கிடைக்க வழிவகை செய்திருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT