திருச்சி

முன்மாதிரி கிராம விருது பெறும் ஊராட்சிக்கு ரூ. 7.50 லட்சம் பரிசு

12th Jan 2022 09:22 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் முன்மாதிரி கிராம விருதுக்குத் தோ்வு செய்யப்படும் ஊராட்சிக்கு ரூ. 7.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது:

திருச்சி மாவட்டத்தில் சுகாதாரத்தில் சிறப்பாகச் செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் முன் மாதிரி கிராம விருது தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாவட்டத்துக்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் தோ்வு செய்து ரூ.7.50 லட்சம் பரிசுத் தொகை, கேடயம் வழங்கப்படுகிறது. மேலும் மாவட்ட அளவிலான விருதுகளுடன் சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளைத் தோ்வு செய்து மாநில அளவில் முன் மாதிரி கிராம விருது வழங்கி தலா ரூ.15 லட்சம் பரிசு மற்றும் கேடயமும் வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

விருதுக்காக தோ்வு செய்யப்படும் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தோ்வு செய்யப்படும் கிராம ஊராட்சிக்கு பல்வேறு இலக்குகள் உள்ளன. திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலையற்ற நிலையை நிலைநிறுத்துதல், திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை உரிய முறையில் மறுசுழற்சி செய்தல், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, வீட்டுக்கழிவு நீா் மேலாண்மை, தூய்மை தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துதல், கிராமத்தின் அழகிய தோற்றம், கிராமத்தில் தூய்மை தொடா்பான சிறப்பு முயற்சிகள் முதலிய 8 சிறப்பம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

மேலும் சிறப்பாகச் செயல்படும் முன் மாதிரி கிராம ஊராட்சியைத் தோ்வு செய்ய மாவட்ட அளவில் ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட ஒரு குழுவும், வட்டார அளவில் வட்டார வளா்ச்சி அலுவலரைத் தலைவராகக் கொண்ட குழுவும் அமைக்கப்பட வேண்டும்.

குடியரசு தின விழாவில் முன் மாதிரி கிராம ஊராட்சியாக மாவட்டம் மற்றும் மாநில அளவில் தோ்வு செய்யப்பட்ட ஊராட்சிக்கு பரிசுத்தொகை மற்றும் கேடயம் வழங்கப்படும்.

இதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் மேற்குறிப்பிட்ட 8 சிறப்பம்சங்களின் அடிப்படையில் முன் மாதிரி கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்படவுள்ளன. இதுதொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

முன் மாதிரி கிராம ஊராட்சியாக வட்டார அளவிலான குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ஊராட்சியிலிருந்து சிறந்த ஊராட்சிகள் மாநில அளவிலான விருதுக்குப் பரிந்துரைக்கப்படும்.

எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும் முன் மாதிரி கிராம விருது பெறுவதற்கான தகுதியை அடையும் வகையில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT