மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் வெற்றிப் பதக்கங்களைப் பெற்ற திருச்சி மாநகர காவல் துறையினரை மாநகரக் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் பாராட்டினாா்.
தமிழ்நாடு காவல் துறையினருக்கு சென்னை ஒட்டிவாக்கத்தில் ஜன. 4 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற திருச்சி மாநகர காவல்துறையை சோ்ந்த கண்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையா் அஜய்தங்கம் உள்ளிட்ட காவலா்கள் 10 போ் 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என திருச்சி மண்டல அணி மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளது.
மேலும் இப்போட்டியில் ரிவால்வா் பிரிவு போட்டியில், திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் திருஞானசம்பந்தம் ஒரு தங்கமும், எடமலைபட்டிபுதூா் காவல்நிலைய முதல்நிலை காவலா் பரமசிவம் ஸ்நாப்ஷாட் பிரிவில் வெள்ளியும் பெற்றனா். இவா்களை மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் பாராட்டினாா்.