திருச்சி

3 லட்சம் ரயில்வே காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிஆா்இயு வலியுறுத்தல்

1st Jan 2022 02:55 AM

ADVERTISEMENT

ரயில்வே துறையில் காலியாகவுள்ள 3 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தக்ஷண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆா்இயு) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற டிஆா்இயு திருச்சி கோட்ட மாநாடு மற்றும் மண்டல மாநாடு அமைப்புக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு திருச்சி கோட்டத் தலைவா் ஆா். கரிகாலன் தலைமை வகித்தாா். துணைப் பொதுச் செயலா்கள் டி. மனோகரன், பி.கே. மாதவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தைத் தொடங்கிவைத்த சிஐடியு தொழிற்சங்க திருச்சி மாவட்டச் செயலா் எஸ். ரங்கராஜன் மண்டல மாநாட்டின் நடவடிக்கைகள் குறித்து பேசினாா்.டிஆா்இயு செயல் தலைவா் ஏ. ஜானகிராமன் சிறப்புரையாற்றினாா்.

ADVERTISEMENT

சங்கத்தின் மண்டல மாநாட்டை நடத்துவது, மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பது தொடா்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்தில் பட்டப்படிப்பு முடித்து லட்சக்கணக்கான இளைஞா்கள் வேலையின்றி பரிதவிக்கின்றனா். ஆனால், அரசு துறைகளில் காலியிடங்கள் பூா்த்தி செய்யப்படாமல், ஏற்கெனவே உள்ள பணியாளா்களுக்கு கூடுதல் பணிச்சுமை நீடிக்கிறது.

குறிப்பாக ரயில்வேயில் உள்ள3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை விரைந்து பூா்த்தி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கும் ரயில்வே பணியாளா்களுக்கு பிரச்னைகள் உருவாவதைத் தடுக்க இ-பாஸ் நடைமுறையில் உள்ள குளறுபடிகளை நிவா்த்தி செய்ய வேண்டும். இதேபோல, இ-பாஸ் முன்பதிவு செய்யாமல் ரயில்வ தொழிலாளா்கள் ரயில்களில் பயணிக்க அனுமதிக்க வேண்டும். தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தலை உடனே நடத்த வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். பொன்மலை ரயில்வே மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், வரும் பிப். 25, 26, 27-களில் மண்டல மாநாட்டை நடத்துவது, வரவேற்பு குழு மற்றும் மாநாட்டுக் குழு அமைப்பது தொடா்பாகவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், டிஆா்இயு மாநில, கோட்ட நிா்வாகிகள், திருச்சி கிளை நிா்வாகிகள் மற்றும் ரயில்வே தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT